தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கடம்பரஅள்ளி அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், தண்ணீர் நிரப்புவதன் மூலம் வகுரப்பம்பட்டி, கடம்பரஹள்ளி, பெரிசாகவுண்டப்பட்டி, பட்டகப்பட்டி உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில் உள்ள திருப்பதி என்பவர் சித்தர்கள் போல வீட்டில் இருந்து கொண்டு, வீடு முழுவதும் ஆங்காங்கே பல்வேறு வாசகங்களை எழுதி வைத்து, பூஜை நடத்துவதும், கிராமத்தில் உள்ள யாரிடமும் பேசாமல், அமைதியாக சுற்றி திரிவதுமாக இருந்துள்ளார்.


 இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து திருப்பதி தனக்கு தனியாக குடிநீர் குழாய் அமைத்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது கிராம மக்கள் குடிநீர் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குழாயை துண்டித்துள்ளனர். இதனால் குடிநீர் விட மறுத்த உங்களை எல்லாம், ஏதாவது ஒரு வழி செய்யாமல் விடமாட்டேன் என தெரிவித்ததாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி திருப்பதி மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல், ஏறுவதும் இறங்குவதுமாக இருந்துள்ளார். 


இதனை கண்ட கிராம மக்கள் திருப்பதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என அச்சமடைந்து காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை ஆய்வு செய்துள்ளனர். 


இந்நிலையில் கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்ற ஒரு சில மாணவர்களுக்கு திடீரென தலைவலி, கண் எரிச்சல், வயிறு வலி, கை கால் வலி மற்றும் மயக்கம் போன்ற உபாதைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உபாதை ஏற்பட்ட மாணவர்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், ஒருவேளை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்ததால் தான் இந்த உபாதை ஏற்பட்டு இருக்கலாமோ என அச்சமடைந்து, கம்பைதல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 


இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடம்பர அள்ளி, வகுப்பம்பட்டி, பெருசா கவுண்டம்பட்டி, பட்டகப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களை அழைத்து,  தலைமையாசிரியர் பழனி, அரசு பள்ளி வளாகத்திலேயே சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தார். 


இதனை  தொடர்ந்து கம்பைநல்லூர் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு இரத்த அழுத்தம் உள்ளிட்ட  பரிசோதனை செய்து ஓஆர்எஸ் கரைசல், மாத்திரை, மருந்துகள் கொடுத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மருத்துவர் குழு மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள அலுவலக குழு ஆய்வு செய்து குடிநீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். 


மேலும் குடிநீர் தொட்டியில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என்ற தகவல் பரவியதாலும், மாணவர்களுக்கு உபாதைகள் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் பரவியதாலும், அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்கள், அச்சமடைந்து, பள்ளிக்கு போன் மூலமாகவும், நேரில் வந்து விசாரணை செய்தனர்.  இதனால் கம்பைநல்லூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.