தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலையின் அடி வாரத்தில் வள்ளி மதுரை அருகே வரட்டாற்றின் குறுக்கே சுமார் 34 அடி உயரத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் சித்தேரி மலை, அரசநத்தம், கலசப்பாடி மலைகளில் இருந்து வரும் மழைநீர் இந்த வள்ளி மதுரை அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையிலிருந்து வள்ளி மதுரை, வாழைத் தோட்டம், தாதராவலசை, கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, கெளாப்பாறை, வீரப்ப நாயக்கன்பட்டி, முத்தானூர், எல்லப்புடையம்பட்டி, கம்மாளம்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் இந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் 5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைப்பதன் மூலம், சுற்று வட்டார பகுதியில் உள்ள 20 கிலோ மீட்டர், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. கடந்தாண்டு பருவ மழை பொழித்துப் போனதா அணைக்கான நீர்வரத்து குறைந்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் வரை 20 அடியாக இருந்து வந்தது.



இந்நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. இதில் சித்தேரி மலைப் பகுதியில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வள்ளி மதுரை அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இந்த தொடர் மழையால், 20 அடியாக அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 26 அடி உயர்ந்தது. மேலும் சித்தேரி மலை, அரசநத்தம், கலசப்பாடி மலையில் இருந்து நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, தற்பொழுது அணையின் நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 10 நாட்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது. இதனால் அணை 34 அடி உயரத்தில், தற்போது 30 அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.  மேலும் தொடர்ந்து சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி மலைப் பகுதியில் மழை பொழிந்து வருவதால், இன்னும் ஓரிரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அணைக்கான நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வள்ளி மதுரை அணை பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்