தருமபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்த பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதில்  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் 38 தனியார் பள்ளிகளின் 304 பள்ளி பேருந்துகளை பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடுசாமி இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, பள்ளி பேருந்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ் கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.




அப்போது நேரடியாக வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடுசாமி, திடீரென ஒரு பள்ளி பேருந்தில் ஏறி தானே இயக்கினார். அப்போது ரிவர்ஸ் கியர் போட முடியவில்லை. இதனை தொடர்ந்து ஓட்டுனர் உதவியுடன் கியர் ராடினை இழுத்து, கியர் போட்டார். அப்பொழுது பேருந்தில் எதுவுமே சரியில்லை, ரிவர்ஸ் கியர் போட ஒரு ஒட்டுநர் வேண்டுமா என கேட்டார். இந்த ஆய்வில் குறைபாடுகளுடைய  12 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அந்த வாகனங்களின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு ஆஜர்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ஓட்டுநர்களுக்கு ஹேன்ட் பிரேக்கின் பயன்பாடு குறித்தும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் வாகனம் சிறைப்பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


மேலும் ஒரு சில பள்ளி பேருந்தின் இருக்கைகள் முழுவதும் பழுதாகி இருந்தது. இதனை கண்ட ஆய்வாளர், எல்லா தனியார் பள்ளிகளிலும், பள்ளி கட்டணம் ,பேருந்து கட்டணம் என பல லட்சம் என வாங்கின்றனர். இந்த நிலையில் பள்ளி பேருந்துகளில் மாணவர்கள் அமரும் இருக்கை, அதிக ஒலி எழுப்பும் ஹேர்ஹரான்கள், அவசர கால வழி,  உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்து வருகிறது. இந்த குறைபாடுகள் அனைத்தையும் , கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறப்பபதற்கு முன் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் சரி செய்யாமல் பேருந்துகள் இயக்கினால், திடீரென ஆய்வு செய்யும் போது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.