தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.கோடுபட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பிஎஸ்என்எல் டவர் அமைக்கும் பணியின் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று மாதத்திற்கு மேலாக ஒரு சில கிராமங்களுக்கு  குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஏ.கோடுபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் முறையாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், முறையாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாசம்பட்டி-பென்னாகரம் செல்லும் சாலையில் ஏ.கோடுப்பட்டி அருகே காலி குடங்களை சாலையில் வைத்து திடீரென  சாலை மறியலில் ஈடுபட்டனர்.



 

மேலும் சாலையில் ஆங்காங்கே கிராமமக்கள் பந்தை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது இளைஞர்கள் சிலர் கயிறு கட்டிலை சாலையில் வைத்து, அரசு பேருந்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து கட்டிலில் அமர்ந்தும், படுத்துக் கொண்டுள் இளைஞர்கள் மறியல் செய்தனரா. இதனால் பேருந்து போக்குவரத்து இல்லாமல் நிறுத்தப்பட்டது. இந்த தகவல் அறிந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, இளங்குமரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி கிராம நிர்வாக அலுவலர் சங்கர் ஊராட்சி மன்ற தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி ஆகியோர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

மேலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை, உடனடியாக சரி செய்து, கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், குழாயினை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில், பென்னாகரம் பிரதான சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.