தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்கிற பட்டதாரி இளைஞர் பாடி, பூகானஹள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு பீனிக்ஸ் என்ற ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். இந்த அமைப்பினர் கிராமங்களில் உள்ள ஏரி, குளம், சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றிலும் மரக்கன்றுகளை வைப்பதும், பள்ளி செல்கின்ற நேரம் தவிர, மற்ற ஓய்வு நேரங்களில் மரக்கன்றுகளை பராமரிப்பதும் தண்ணீர் பாய்ச்சுவதும், அதேபோல் கோடை காலம் வருகின்ற நேரத்தில் மரக்கிளைகளில் அமருகின்ற பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்து பொது சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



 

மேலும், மாணவர்களுக்கு பல்வேறு தமிழக பாரம்பரிய கலைகளை கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில், சிலம்பாட்டம், பறை, தப்பாட்டம் உள்ளிட்ட கலைகளையும், கற்று கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்கும் நோக்கில் பீனிக்ஸ் குழுவில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பம்பை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கலைகள் தமிழர்கள் இருக்கும் வரை உயிர் வாழ வேண்டும் என்ற நோக்கில், பாப்பாரப்பட்டி சேர்ந்த ஆண்டவர் என்ற கிராமிய கலைஞர் பல்வேறு இடங்களில், 350 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பம்பை பயிற்சி கொடுத்து வருகிறார். இந்த ஆண்டவர் பீனிக்ஸ் குழுவில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பம்பை பயிற்சியினை தினந்தோறும் வழங்கி வருகிறார். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு புரியும்படி, பாடம் கற்பிப்பது போல் கற்பித்து வருகிறார். தனது சொந்த செலவில் 10 பம்பைகளை வாங்கி கொடுத்து, மாணவர்களுக்கு இந்த இசை கலையை கற்பித்து வருகிறார். பீனிக்ஸ் குழுவில் உள்ள 25க்கும் மேற்பட்ட அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமோடு இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



 

நமது பாரம்பரிய இசை கலைகளில் அனைத்து கலைகளையும் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இல்லாமல் பயின்று வருகின்ற நிலையில், பம்பை கலையில் மற்றும் பெண்கள் கற்றுக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர். உலக வரலாற்றில் முதன்முறையாக இந்த பீனிக்ஸ் குழுவில் உள்ள ஆறு சிறுமிகள் பம்பை இசையை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். இந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பம்பையில் நன்கு பயிற்சி பெற்று, கைதேர்ந்த கலைஞர்களைப் போலவே, தாங்களே சரணம் சொல்வது, பாட்டு பாடுவது, பாட்டு பாடிக்கொண்டே பம்பையை வாசித்து வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள் பம்பையை வாசித்துக் கொண்டே, பாட்டு பாடி அசத்தி வருகின்றனர். 



 

மேலும் பம்பை பயிற்சி கொடுக்கும் கலைஞர் ஆண்டவர் வரவில்லை என்றாலும் கூட, இங்கு பயிற்சி பெற்றுள்ள இந்த மாணவர்கள் தாங்களே பம்பை இசைப்பதும், தெரியாதவர்களுக்கு கற்றும் கொடுத்து வருகின்றனர். இதனால் நம் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கவும் முடியும். அதேபோல் இவர்கள் நன்கு கைதேர்ந்த கலைஞராக மாறுகின்ற பொழுது, பள்ளி நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அதன் மூலம் கிடைக்கின்ற வருவாயை வைத்து தங்களது படிப்பு செலவையும், குடும்பத்திற்கும் உதவியாக இருக்கும் நோக்கில், பள்ளி குழந்தைகளுக்கு இந்த கலையை கற்பித்து தருவதாக கலைஞர் ஆண்டவர் தெரிவித்துள்ளார். மேலும் நம் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் இசை பள்ளிகளில் பம்பையையும் சேர்த்து மாணவர்களுக்கு, இதனை கற்பித்து வருகின்ற பொழுது இந்த கலையை அழியாமல் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.