தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், நாகர்கூடல் ஊராட்சியில், 10 கிராமங்கள் உள்ளன. இந்த 10 கிராமங்களில் கழிவு நீர் கால்வாய் மற்றும் கிராமப்புறங்களை தூய்மைப்படுத்த, தூய்மை காவலர்களும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு டேங்க் ஆபரேட்டர்கள் என பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கூலிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (50), (மாற்றுத் திறனாளி) என்பவர் கடந்த, 30 ஆண்டுகளாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டராக பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி கோவிந்தன், உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் கோவிந்தன் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். அதனால் கோவிந்தன் செய்து வந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர் பணியை, அவரது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் அவரது மனைவி வேங்கம்மாளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சில நாட்கள் வேங்கம்மாள் தண்ணீர் திறந்து விடும் பணி செய்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஊராட்சி நிர்வாகம் வேங்கம்மாள் செய்து வந்த ஆப்பரேட்டர் பணி இடத்திற்கு வேறு ஒரு நபருக்கு பணி வழங்கியுள்ளனர். இதனால் வேங்கம்மாள் பணி இல்லாமல் வருவாய் இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டது.


மேலும் கோவிந்தன் இறந்த பின் அவருடைய சம்பள நிலுவைத் தொகை மற்றும் ஈமச்சடங்கு செலவு, இன்சுரன்ஸ் உள்ளிட்டவற்றை வழங்காமலும் இழுத்தடித்துள்ளனர். மேலும் பணியும் வழங்காமல் இருந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வேங்கம்மாள் முறையிட்டுள்ளார். எந்த பதிலும் கிடைக்கவில்லை.  இதனை கண்டித்து தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில், நாகர்கூடல் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வேங்கம்மாளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மேலும் டேங்க் ஆப்ரேட்டர் கோவிந்தனின் மனைவி வேங்கம்மாள், கணவர் இன்றி தவித்து வரும் நிலையில், உடனடியாக அவருக்கு, அவருடைய பணியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.