பென்னாகரம் அருகே அரசு மதுபான கடை வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனு கொடுக்க பணம் கொடுத்து அழைத்து வந்ததாக பெண் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஞ்சேஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட நலப்பரம்பட்டி, கெட்டூர், பளிஞ்சரஅள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராமங்கள் உள்ளது‌. இந்த கிராமத்திற்கு அருகில் தருமபுரி - பென்னாகரம் சாலை ஆதனூர் அரசு மதுபானக் கடை இருந்துள்ளது.


ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கடை அகற்றப்பட்டுள்ளது. இந்த மது கடையை அகற்றி விட்டதால் 20க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் மது கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகாமையில் மதுக்கடை இல்லாததால், மது வாங்க செல்லும் மது பிரியர்கள், பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டி மது கடைக்கு 20  கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.


இதனால் நேற்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு மதுபான கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்திய ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் ஜக்கம்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை இருப்பதால், மது குடிக்க செல்லும் ஆண்கள் வருவதற்கு நேரம் ஆகிறது. இதனால் வாகன விபத்துகளில் சிக்கும் அபாயம் இருந்து வருகிறது அதேபோல் சொந்த ஊரிலேயே சந்து கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்கிறார்கள்.



அங்கு மது பாட்டில்கள் வாங்க சென்றால், சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் மது குடிக்க செலவாகிறது. எனவே தங்கள் ஊரிலேயே அரசு மதுபான கடை அமைத்துக் கொடுத்தால், ஆண்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை, ஆண்களுக்கும், ஒரு குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என வலியுறுத்தி பெண்களும் மனு அளிக்க வந்திருந்தனர். 


இந்த நிலையில் மதுக்கடை வேணும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டி கொடுத்த பெண்மணியே கிராமத்தில் உள்ள பெண்கள் சுற்றி வளைத்து திட்டியுள்ளனர்.


இந்த நிலையில் நேற்று மது கடை வேண்டும் என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்மணி, பேசும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நாங்கள் மீட்டிங் சென்றதில்லை, அதைப் பற்றி எங்களுக்கு ஒன்னும் தெரியாது. அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் கிராமத்திற்கு அரசு மதுபான கடை வேண்டுமென சொல்ல சொன்னாங்க, அதனால தான் நான் அப்படி சொன்னேன். அங்க போன பெண்களுக்கு, பணம் 300 ரூபாயும், ஆண்களுக்கு குவாட்டர் பாட்டில்கள் வாங்கிக் கொடுத்தாங்க என பேசியுள்ளார்.


எங்க ஊருக்கு மதுக்கடை வேணாம், என அந்த பேட்டிக் கொடுத்த பெண்மணி பேசி உள்ளார். இதனை அந்த கிராமத்தைச் சார்ந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.