போதிய தண்ணீர் இல்லை


கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து முற்றிலுமாக இல்லை. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த ஆறு மாத காலமாக நீர்வரத்தின்றி, வறண்டு வெறும் பாறைகளாக காட்சி அளித்து வந்தது. இந்நிலையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் சூழலில், தொடர்ந்து காவிரி ஆற்றில் மாதந்தோறும் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை, திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசை வலியுறுத்தி வந்தது. ஆனால் மழை இல்லாததால் தங்களிடம் போதிய தண்ணீர் இல்லை என கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.



 

நீர்வரத்து அதிகரிப்பு


இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வந்தது. இதனால் கர்நாடக மாநில குடிநீர் தட்டுப்பாட்டை போக்க காவிரி ஆற்றில் டேங்கர்கள் மூலமாக கர்நாடக அரசு தண்ணீர் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக அணைகளில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு, குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது. இதனால் கடந்த ஆறு மாதங்களுக்கு பிறகு தற்பொழுது நள்ளிரவு முதல் திடீரென காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆறு மாதமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடியாக இருந்து நீர்வரத்து, தற்பொழுது திடீரென அதிகரித்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு  நீர்வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பாறைகளாக காட்சியளித்து வந்த காவிரி ஆறு முழுவதும் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, சினியருவி,  மெயினருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி, ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.



 

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


மேலும் கோடை காலம் தொடங்கிய நிலையில், நீர் வரத்து குறைவாக இருந்ததால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. அதேபோல் கோடை விடுமுறைக்காக வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் சுற்றுலாவை நம்பி இருந்த தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் தவித்து வந்தனர். தற்பொழுது இந்த நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளும், சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் கர்நாடக மாநிலங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் தேவை இருக்கின்ற வரையில், கர்நாடக அணைகளில் காவிரி ஆற்றில் நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.