தருமபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, சம்பந்தமில்லாத இந்து சமய அறநிலையத் துறை இடத்தில் அவசரகதியில் பூஜைப் போட்டு போட்டோ எடுத்த நகராட்சி தலைவரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தருமபுரி குமாரசாமிபேட்டையில் செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, தருமபுரி – பென்னாகரம் சாலையில், சொந்தமாக, 4.19 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  ஆனால் இந்த பகுதியில், தருமபுரி நகராட்சி குப்பைகளை கொட்ட பயன்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தடங்கம் பகுதிக்கு குப்பை கொட்டும் இடம் மாற்றப்பட்ட நிலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக, கோவில் நிலத்தில் நேற்று முன்தினம், திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர்  இலட்சுமி, அவரது கணவரும், திமுக நகர செயலாளருமான நாட்டான் மாது, சில நகர்மன்ற உறுப்பினர்கள் இணைந்து, அவசர, அவசரமாக போட்டோ மற்றும் ஆவணங்களுக்காக பூமி பூஜை போட்டனர். தொடர்ந்து போட்டோ எடுத்துக் கொண்ட பின், அங்குயிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு சென்றனர்.



 

இதனையறிந்த செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தா மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அங்கு வந்து பூஜை போட்ட கற்களை தூக்கி எரிந்தனர். அப்பொழுது பாதாள சாக்கடை திட்டத்திற்காக சம்பந்தம் இல்லாத இடத்தில், தருமபுரி நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் இந்து சமய அறநிலையத் துறை இடத்தில் பூஜை போட்டு, இந்த இடத்தை அதிகாரிகள் அபகரிக்க துடிக்கின்றனர். ஏற்கனவே, நகராட்சிக்கு குப்பை கொட்ட குத்தகைக்கு விட்டதில், 2.70 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை இதுவரை கொடுக்காமல், ஏமாற்றி வருவதாக தெரிவித்தனர். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, சம்பந்தம் இல்லாத இடத்தில், அவசர கதியில் ஆவணங்களுக்காக பூஜைப் போட்டு, போட்டோ எடுத்துக் கொண்டதால், பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் அந்த இடத்தில் இருந்த பூஜைப் போட்ட பொருட்களை அப்புறப்படுத்தினர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

இதுகுறித்து, தருமபுரி நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரன் கேட்டபோது, ”தருமபுரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், 64.58 கோடி ரூபாய் மதிப்பிலும், 11.70 கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூமி பூஜை கடந்த ஞாயிற்றுக்கிழமை பென்னாகரம் சாலையில் உள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்டது.  அப்போது, சாலையோரம் இடம் இல்லாததால், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமன நிலத்தில் பூஜை போடப்பட்டது. ஆனால் அந்த கோவில் நிலத்தில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்.