காரிமங்கலம் அருகே கோவில் நிலத்தில் பட்டா வாங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழு பானை பங்காளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


ஏழு பானை பங்காளிகள் குலதெய்வ கோயில்


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மொளப்பனஅள்ளி கிராமத்தில் அருள்மிகு பெரியாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த பெரியாண்டவர் கோயில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் வசிக்கின்ற ஏழு பானை பங்காளிகளுக்கு சொந்தமானது. இதற்கு 2000 குடும்பங்கள் மேல் இருந்து வருகின்றனர்.


2000 குடும்பங்களுக்கு சொந்தமான கோயில் நிலம்


இந்த ஏழு பானை பங்காளிகள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல், காதணி விழா செய்தல் போன்ற நிகழ்வுகள் இந்த பெரியாண்டவர் கோயிலில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு கோயிலுக்கு சொந்தமான நிலத்தை யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக வடிவேல் மனைவி சென்னம்மாள் என்பவர் பட்டா வாங்கியுள்ளார். ஆனால் இந்த பட்டா பெற்றவர் இன்று வரையில் நிலத்தின் பக்கம் வந்ததில்லை. உளவு செய்வதோ மற்றும் விவசாயம் செய்வதோ கிடையாது. 


கோவிலை சுற்றி புளிய மரங்கள்


இந்த நிலையில் இந்த 7 பானை பங்காளிகள் இந்த கோயிலை பராமரித்து கொண்டு கோயிலை சுற்றிலும் புளிய மரங்கள் வைத்துள்ளனர். இந்த புளிய மரத்தில் கிடைக்கும் மகசூலை வைத்து ஏலம் விட்டு அந்த தொகையில், கோயில் செலவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மிகவும் பழமையான இந்த கோயிலை பாலாயம் செய்து புதிதாக கோயில் கட்ட தீர்மானித்து கடந்த பிப்ரவரி மாதம் பூஜை செய்து அடிக்கல் நாட்டி கோயில் கட்டி வருகின்றனர். இதில் கோயிலுக்காக, கோயில் முன்பு ஒன்றை ஏக்கர் நிலமும், பூனாத்தனல்லி செல்லும் தார் சாலைக்கு வடக்கில் உள்ள நிலமும் கோயிலுக்கு சொந்தமானது. இதில் இந்த நிலம் முழுவதும் வேறு ஒருவருக்கு பட்டா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


கோவில் நிலத்தை பட்டா போட்ட தனிநபர்


ஆனால் இந்த பட்டா பெற்றுள்ள நபர் இந்த கிராமத்திற்கும், இந்த ஏழு பானை பங்காளிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாதவர், இவர்களது குடும்பம் அரசு பணியிலும் இருந்து வருகின்றனர். 


தற்பொழுது கோயில் கட்டிடப் பணிகள் கான்கிரீட் வரை சென்றுள்ளது. இந்த நிலையில் கோயில் நிலம் முழுவதும் தனக்கு சொந்தமானது என தனி நபர் ஒருவர் பட்டா பெற்று வந்து கோயில் பணியை தடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழு பானை பங்காளிகள் குடும்பத்தினர் காலகாலமாக தங்களது கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலத்தை சம்பந்தமில்லாத ஒருவர் தங்களுடையது என பட்டா இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசு பணியில் இருப்பவரின் குடும்பத்தினருக்கு பட்டா வழங்கியது தவறான நடைமுறை. எனவே தங்களது பரம்பரை கோயிலுக்கு சொந்தமான நிலத்தை வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து தங்களது நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 பானை பங்காளிகள் மனு அளித்தனர்.


உரிய நடவடிக்கை எடுக்க ஏழு பானை பங்காளிகள் கோரிக்கை


மேலும் இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி போலியாக பட்டா பெற்றுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பட்டாவினை பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ரத்து செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.