பாளையம்புதூர் பள்ளியில் முன்னாள் முதல்வர் நினைவை பாதுகாக்க இன்னாள் முதல்வர் செய்தது என்ன தெரியுமா?

தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு பள்ளிக்கு காமராஜருக்கு பிறகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 11 வருகை தந்தார்

Continues below advertisement

அவர் பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைகளை 40 லட்சம் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும்படி உத்தரவிட்டார்.

Continues below advertisement

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் இரண்டு ஏக்கர் ஏக்கரில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதியில் வேப்பமரம், புளியமரம், புங்கன்,  தூங்கும் மரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளி வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமையான மரங்களும் உள்ளன. இப்பள்ளியில் 24 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. 650 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

 கோம்பை, பாளையம் புதூர், காமராஜர் நகர், பம்பகாரம்பட்டி, தாதநாயக்கன்பட்டி, தண்டுகாரம்பட்டி, பாகல்பட்டி, பூத்து பள்ளம், கங்களாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

 இப்பள்ளியின் வளாகத்தில் விடுதி வசதி உள்ளது. 50 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக கிருஷ்ணன் உள்ளார்.

மேலும் 29 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளி 1961- ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக இயங்கியது . 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி முன்னாள் முதல்வர் காமராஜர் எம்பி ஆக இருந்தபோது இப்பள்ளியின் அறிவியல் கூடத்தை நேரில் வந்து திறந்து வைத்தார்.

அப்போதைய எம்எல்ஏ பி .கே. சி.  முத்துசாமி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துள்ளார். பின்னர் 1978 ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியாக இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டது.

 இந்த அரசு பள்ளி சுற்றுவட்டார பகுதியில் பெயர் பெற்ற பள்ளியாகும். இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது இரண்டு பேர் எம்,எல்,ஏவாக உள்ளனர்.

தர்மபுரி பாமக எம்.எல்.ஏ.,  வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ .கோவிந்தசாமி ஆகியோரும் தற்போது இப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கிருஷ்ணன் இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆவார்கள்.

இதுபோக பல தொழிலதிபர்கள் ஆகவும் அரசுத் துறைகளில் அதிகாரிகளாகவும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் இப்பள்ளியின் வளாகத்தில் நடந்த விழாவில் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்பொழுது முன்னாள் முதல்வர் காமராஜர் வருகை தந்த பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள நான்கு வகுப்பு அறைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றார்.

 இதை அடுத்து இந்த பள்ளியில் பழுதடைந்த நான்கு வகுப்பறைகளும் 40 லட்சம் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வுப்பணியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் காமராஜருக்கு பின்னர் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் இப்பள்ளிக்கு வந்தது இப்பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

 இதுகுறித்து இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைசாமி கூறுகையில்:- 

 நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பழமையான பள்ளி இப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 493 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் பள்ளியாக இப்பள்ளி தேர்வானது.


முன்னாள் முதல்வர் காமராஜர் வருகை தந்த இப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள வகுப்பறைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று முதல்வர் கூறியதை வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

 பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் கூறுகையில்:- 

 பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி பொது தேர்வுகளில் 95 சதவீதத்திற்கு மேல் தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்று வருகிறோம். கிராமத்து மாணவர்களின் நம்பிக்கை பெற்ற பள்ளியாக எங்கள் பள்ளி உள்ளது. எங்கள் பள்ளிக்கு காமராஜருக்கு பிறகு தமிழக முதல்வர் வந்து அரசு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola