இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்தியி்ல் ஆட்சி செய்த அரசுகளுக்கு எப்போதும் இந்தி என்பது ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் இந்தி என்பது எந்தவொரு மாநிலத்தவர்க்கும் இருக்கும் நிலையில், இந்தியை கட்டாயமாக்க பல ஆண்டுகாலமாகவே மத்தியில் இருக்கும் அரசுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
கொந்தளித்த மராத்தியர்கள்:
அந்த வரிசையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசும் அந்த முயற்சிகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகிறது. புதிய கல்விக்கொள்கையில் 3வது மொழியாக இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநில அரசுகளும் குற்றம் சாட்டி வந்தன.
இந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சி செய்யும் மகாராஷ்ட்ராவில் அவர்கள் கொண்டு வந்த மும்மொழிக் கொள்கையில் இந்தி 3வது மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது மராத்தியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஏற்கனவே மகாராஷ்ட்ராவில் மராத்தி பேசுபவர்களை காட்டிலும் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொடர்ந்து பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பின்வாங்கிய பா.ஜ.க. அரசு:
மகாராஷ்ட்ராவின் மிகவும் முக்கிய தலைவராக திகழ்ந்த பால் தாக்கரேவின் வாரிசுகளான உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் இந்தி மொழியை திணிப்பதை ஏற்க முடியாது என்று ஒருமித்த குரலில் எதிர்த்தனர். இந்த சூழலில், அவர்கள் முன்னெடுத்த போராட்டம், பிற மராட்டிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக அந்த மாநில பா.ஜ.க. அரசு பின்வாங்கியது.
மேலும், இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ராஜ்தாக்கரேவும், உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசியது ஒட்டுமொத்த மகாராஷ்ட்ரா அரசியலிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மீண்டும் மகாராஷ்ட்ராவில் சிவசேனா பழைய பலத்துடன் எழுச்சி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெரும் பின்னடைவு?
இது மட்டுமின்றி, இந்த விவகாரம் பா.ஜ.க.விற்கு பெரும் பி்ன்னடைவாக மாறியுள்ளது. ஏனென்றால், இந்தி திணிப்பு எதிர்ப்பை தென்னிந்திய மாநிலங்களே பெருவாரியாக எதிர்த்து வந்தன. ஆனால், வட இந்தியாவில் அதுவும் பா.ஜ.க. கோலோச்சும், தேசிய அரசியலில் முக்கியத்துவம் மிகுந்த மகாராஷ்ட்ராவில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்திருப்பது பா.ஜ.க. தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவில் எழுச்சி?
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் மட்டுமே நடத்தி வரும் நிலையில், மகாராஷ்ட்ராவில் மராத்தி பேசாதவர்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்தியது இந்த விவகாரத்தின் வீரியத்தை அவர்களுக்கு உணர்த்தியுள்ளது. தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்திலே இந்த நிலைமையா? என்று பா.ஜ.க. தலைமை புலம்பி வருவதாக கூறப்படுகிறது. இது அடுத்து அங்கு நடக்கும் தேர்தல்களிலும் எதிரொலிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதன் காரணமாக ராஜஸ்தான், குஜராத், பீகார், பஞ்சாப் என வட இந்தியா முழுவதும் அவர்களது சொந்த மொழி மீதான எழுச்சி மீண்டும் வலுப்பெறும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதனால், இந்திக்கு எதிரான கண்டனம் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.