தருமபுரி அதியமான்கோட்டை முதல் ராயக்கோட்டை வழியாக ஓசூர் வரை புதிய நான்கு வழிச்சாலை ரூ.899 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது. இதில் கடகத்தூர், அல்லியூர், புலிக்கரை, சோமனஹள்ளி, கர்த்தாரப்பட்டி, பாலக்கோடு என பல்வேறு இடங்களில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஒப்படைக்கப்பட்டது‌. இந்நிலையில் புதிய நான்கு வழிச் சாலையில் மழைநீர், கழிவுநீர் செல்ல, அணுகு சாலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது.


ஆனால் மழைக் காலங்களில் ஓசூர்-தருமபுரி புதிய சாலையில் பல்வேறு இடங்களில் பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதில் கர்த்தாரப்பட்டி-பாலக்கோடு செல்லும் பாலத்தின் கீழ் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம், மேடு தெரியாமல் இருப்பதால், சிலர் கீழே விழுந்து காயமடையும் சூழல் இருந்து வருகிறது. அதேபோல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள், விவசாய பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், இருசக்கர வாகனம், கார், லாரி, பேருந்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த தண்ணீர் வெளியேற முடியாமல் இருப்பதற்கு காரணம், பாலத்தின் அருகில் இருபுறமும் உள்ள கால்வாய் உயரமான பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தரைப்பகுதி தாழ்வாக இருப்பதால், கால்வாய் உயரமாக இருப்பதால், தண்ணீர் கழிவு நீர் கால்வாய் பகுதிக்கு செல்ல முடியாமல், தேங்கி நிற்கிறது.


இதுகுறித்து பலமுறை தருமபுரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். 


இதனால் பாலக்கோடு பகுதியில் சிறிது நேரம் மழை பெய்தாலும் கூட, கர்த்தாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரம்த்திற்குள்ளாகி வருகின்றனர். 




எனவே பொதுமக்களின் நலன் கருதி ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ள, கழிவு நீர் கால்வாய்க்கு மழை தண்ணீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.