தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோயில் அமைந்து உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாத இரண்டாவது செவ்வாய்க்கிழமை பிரம்மாண்டமான திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த திருவிழாவின்போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் விமர்சையாக திருவிழா நடத்தி வருகின்றன. அந்த நேரத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் அமாவாசை தினங்களிலும் முக்கிய திருவிழா நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.




மேலும் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிக் கொண்டு வேண்டுதல் நிறைவேறியவுடன், நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்தக் கோயிலில் அன்னதானம் நடைபெறுகிறது. அதற்காக இந்த கோயிலின் முன் பகுதியில் அன்னதானம் போடுவதற்காக ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.


இந்த முனியப்பன் கோயில் வரும்  பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியலை அறநிலையத்துறை அதிகாரிகள் மாதத்துக்கு ஒரு முறை உண்டியலை திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து வருகின்றனர். இந்து அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை நேற்று  தருமபுரி அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், உண்டயலை திறந்து, பணம் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த உண்டியலில் ஒரு காசோலை இருந்ததை எடுத்தனர். அதில் 90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். உடனே காசோலையை கைப்பற்றிய அதிகாரிகள் அதில் மகேந்திரா டெக்னாலஜி என்ற பெயரில், சவுத் இந்தியன் வங்கிக்கான கணக்கில் காசோலையில் போடப்பட்டது தெரியவந்துள்ளது.


இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும் அவ்வாறு இருக்கையில் அந்த கணக்கில் பணம் உள்ளதா  என்பது குறித்து, சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


மேலும் இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலையா என்பது தெரியவரும். கடந்த ஓராண்டுக்கு முன் தர்மபுரி பிரசித்தி பெற்ற குமாரசாமிபேட்டை முருகன் கோயிலில் பக்தர் ஒருவர் தனக்குள்ள கடன் குறித்து விவரங்களை எழுதி உண்டியலில் போட்ட நிலையில், தற்போது பென்னாகரம் கோயில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகை கொண்ட காசோலை போடப்பட்டுள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது