தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களை வனத் துறையினர் வெளியேற்று வருகின்றனர்.
பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், சிங்காபுரம், ஒகேனக்கல், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் உள்ளிட்டவர்களை வனத் துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.  இந்நிலையில் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்து வரும் அவர்களை, வனப்பகுதி நிலத்தில் குடியிருப்பதாக கூறி வனத்துறையினர் அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்து வந்தனர்.



மேலும், கடந்த சில மாதங்களாக  வனத் துறையினர் நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 10க்கும் மேற்பட்ட வனத் துறையினர், பொதுமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வனத் துறையினர்  வீடுகளின் கூறைகளை பிரித்துள்ளனர்.  பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உடலின் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  மேலும் கடந்த ஐந்து தலைமுறைகளாக குடியிருந்து வருபவர்களை  திடீரென வனப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவதால், போக இடம் தெரியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக தெரிவிக்கின்றனர். 


இது குறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் கேட்டபோது, “கடந்த சில மாதங்களாகவே வனப் பகுதியில் உள்ளவர்கள் வனத்தை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்து, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒகேனக்கல் பகுதியில் மீன் பிடிக்க காவிரி ஆற்றுக்கு சென்ற மீனவர்கள், அங்கே வீடு கட்டி வசித்து வருகின்றனர்.  இந்த பகுதி யானை வழித்தடம் என்பதால், இவர்களை வெளியே வருமாறு பலமுறை நோட்டீஸ் வழங்கிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களுக்கு மாற்று இடமாகவும் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மக்கள் ஊட்டமலை பகுதியில் இட ஒதுக்கினால் மட்டுமே செல்வோம் என குறிப்பிட்ட இடத்தை கேட்டு, இங்கிருந்து வெளியே செல்ல மறுத்து வருகின்றனர். ஆனால் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வனப் பகுதிக்குள் குடியிருக்க வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் வெளியேறாமல் மறுத்து வருகின்றனர். இன்று வனத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சி செய்தபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.