காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்து, காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகள், தங்கும் விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. ஒகேனக்கல்-தேன்கணிக்கோட்டை சாலை மூழ்கியதால், போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
 




காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகா அணைகள் முழுவதும் நிரம்பிள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 2.50 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக இருந்தது.


தொடர்ந்து இன்று காலை மேலும் அதிகரித்த நீர்வரத்து, வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடியானது. தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை நிலவரப்படி வினாடிக்கு 2.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.


இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, வெள்ளைக் காடாய் காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த ஒரு வார காலமாக, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 18-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கும், பரில் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


மேலும், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு, முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், தங்கும் விடுகளில் தண்ணீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளித்து வருகிறது. ஆனால் கடந்த 15 நாட்களாகவே நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வந்ததால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் தங்கும் விடுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் ஒகேனக்கல்-தேன்கணிக்கோட்டை சாலையில் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியதால் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது.


மேலும் அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் இந்த புறம் இருந்த பேருந்துகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்டவற்றில் வந்தவர்கள் வனப் பகுதிக்குள் நுழைந்து தேன்கனிக்கோட்டை பகுதிக்கு சென்றனர்.


கடந்த 2019 ஆம் ஆண்டு வினாடிக்கு மூன்று லட்சம் கன அடி வந்த நிலையில் தற்பொழுது 5 ஆண்டுகளுக்கு பிறகு 2 லட்சம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து இன்று நள்ளிரவுக்குள் மேலும் அதிகரித்து 2.50 இலட்சம் கன அடியாக உயர வாய்ப்புள்ளது.


தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால், அவர்களை தங்க வைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் பகுதியில் தனியார் மண்டபம் அரசு பள்ளிகளில் முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காவிரி கரையோரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.