தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, ஒகேனக்கல், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, புள்ளிமான், காட்டு எருமை, மயில் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் இருந்து வருகிறது. வனப் பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்ற சூழலில் வனப் பகுதியை விட்டு வெளியேறி, கிராமப் புறங்களுக்கும், விவசாய நிலங்களுக்குள்ளும் வன விலங்குகள் படையெடுத்து வருகின்றது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏற்காடு மலை அடிவாரத்தின் பின் பகுதியில் தேவராஜபாளையம், மோளையானூர், பூனையானூர், வெங்கடசமுத்திரம் பாப்பிரெட்டிப்பட்டி, முள்ளிக்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராம பகுதிகளில் நெல் கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியில் ஏற்பட்ட உணவு மற்றும் தண்ணீர் பற்றாக் குறையின் காரணமாக வன விலங்குகளான காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி, அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் கிராமங்களுக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ஏற்காடு மலை பகுதியிலிருந்து ஆறு காட்டெருமைகள் கூட்டமாக பூனையானூர் கிராமத்தில் நுழைந்தது. தொடர்ந்து விவசாயி நிலங்கள் வழியாக சென்று மோளையானூர் கிராமத்திற்க்குள் காட்டெருமைகள் கூட்டம் நுழைந்துள்ளது. இந்த காட்டெருமைகள் கூட்டத்தை கண்ட கிராம மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.
இதனை தொடர்ந்து மொரப்பூர் வனத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மொரப்பூர் வன சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில், வனவர் செந்தில்குமார், வனக் காப்பாளர்கள் கபில், வேடியப்பன் ஆகியோர், மோளையானூரில் முகாமிட்டிருந்த காட்டெருமைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது 5 காட்டெருமைகளும் வாணியாற்றில் இறங்கி ஏற்காடு மலையை நோக்கி சென்றது. ஆனால் இந்த கூட்டத்தில் இருந்து தப்பிய ஒரு ஆண் காட்டெருமை மட்டும் செந்தில்குமார் என்பவரின் விவசாய நிலத்தில் நுழைந்தது. இதனை அறிந்த வனத் துறையினர், விவசாய நிலத்தில் முகாமிட்ட காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டெருமை மலை பகுதிக்கு நோக்கி சென்றது. பாப்பிரெட்டிபட்டி பகுதியில் தொடர்ந்து பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும் வன விலங்குகள் நுழைவதை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.