தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை, கம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலைகள் பழுதாகி, குண்டும் குழியுமாக இருப்பதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தம்மம்பட்டி கிராம மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கு சேலம் மாவட்டம் சென்று, தருமபுரி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் சாலை வசதி முறையாக இல்லாததால், சேலம் மாவட்டத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை இந்த மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை வசதி அமைத்துக் கொடுக்காததை கண்டித்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராமத்தில் விளம்பர பதாகை வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் தருமபுரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கிராம, மாவட்ட, மாநில சாலைகள் பெரும்பாலும் பொழுதாகி இருந்து வருகிறது. இதனால்  அன்றாடம் விபத்துகள் ஏற்படும் சூழல் இருந்து வருகிறது என, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்து பேசி உள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை அமைத்துக் கொடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மனு அளித்துள்ளார். ஆனால் நேற்று சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு திடீரென சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது கிராம மக்கள் உள்ளிட்ட பலர் சட்டமன்ற உறுப்பினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமர்ந்தனர். 



 

இதனை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த தருமபுரி வரீவாய் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையிலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட, எம்எல்ஏ வெங்கடேஸ்வரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட  தம்மம்பட்டி ஊராட்சி சோளிங்கர் முதல் மலைக்காடு வரையிலான ஆறு கிலோமீட்டர் சாலையில், மிகவும் சேதம் அடைந்த பகுதியில், நாளையே தற்காலிக சீரமைப்பு செய்யவும் மற்ற கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து இரண்டு மணி நேரத்தில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பொதுமக்கள்  நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்து ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் பொதுமக்களுக்காகத்தான் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன்‌ எனவே அவர்களுக்கு பதிலாக நானே  போராடுகிறேன். பொதுமக்களின் கோரிக்கை குறித்து சட்டமன்றத்திலும் தொடர்புடைய துறை சார்ந்த செயலாளர்களிடம் நேரில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டேன். தற்போது அதிகாரிகள் சாலை பணிகளை முடித்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.‌ ஆனால் சாலை அமைத்து கொடுக்காவிட்டால், மீண்டும் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்தார்.