தர்மபுரி மாவட்டம் தலைமை மருத்துவமனை கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.100 கோடி மதிப்பில் 800 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனையில் 1230 உள்நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகள்


இங்கு 16 அறுவை சிகிச்சை அரங்குகள், டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் கருவிகள்  வசதிகள் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட நாலு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். 


இந்த மருத்துவமனை கண், குழந்தைகள் பிரிவு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, பிரசவம், பச்சிளம் குழந்தைகள் பிரிவு என 13 துறைகளில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். 


டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 106 படுக்கைகள் தயார் நிலையில்


இந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை அடுத்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் வார்த்தை 2வது தளத்தில் தயார் நிலையில் வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் 40 குழந்தைகள், ஆண்கள், பெண்கள் 66 பேர் என தனிதனி வார்டுகளாக மொத்தம் 106 பேர் சிகிச்சை பெற படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.


அனைத்து படுக்கையை சுற்றிலும் கொசுவலைகள் போடப்பட்டுள்ளது


அனைத்து படுக்கையை சுற்றிலும் கொசு வலை கட்டப்பட்டுள்ளது. நோயாளிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் 60 செவிலியர்கள், 15 டாக்டர்கள், துறை தலைவர்கள், 20 மருத்துவர்கள், சுழற்சி முறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில்


மேலும் காய்ச்சலுக்கு தேவையான பாராசிட்டமால், ஆண்டிபயாட்டிக் மாத்திரைகள், ஊசி மருந்துகள் குழந்தைகளுக்கு தேவையான சிறப்பு ஊசி மருந்துகளும், தேவையான அளவிற்கு தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளன என அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் உள்ளிருப்பு மருத்துவர்கள் நாகநாதன் ஆகியோர் கூறியதாவது:- 


தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் காய்ச்சலுக்காக புறநோயாளிகளாக 30 பெரிய வர்களும், 50 குழந்தைகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல் உள்நோயாளிகளாக சாதாரண காய்ச்சலுக்கு 36 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 


இங்கே குழந்தைகள், ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு தனித்தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு தனி கவனம்  செலுத்துவதற்காகவே சிறப்பு குழந்தைகள் மருத்துவர் எந்த நேரமும் மருத்துவமனை வார்டில் தயாராக இருப்பார்.


நோயாளிகளுக்கு தேவையான உணவுகளும் வழங்கப்படுகிறது


காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு தினமும் நிலவேம்பு கசாயம், ஓ ஆர் எஸ் கரைசல், அரிசி கஞ்சி, சுடு நீர், ஆகிய 24 மணி நேரமும் தேவையான அளவு தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 


மேலும் தேவையான நோயாளிகளுக்கு பால் மற்றும் ரொட்டியும் வழங்கப்படுகிறது. உள் நோயாளிகளுக்கு மருத்துவமனை மூலமே மூன்று நேரமும் உணவு வழங்கப்படுகிறது. 


இதுவரை தர்மபுரியில் டெங்கு பாதிப்பு இல்லை


தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை டெங்கு பாதிப்புடன் எந்த நோயாளியும் சிகிச்சை பெறவில்லை. இருந்தபோதும் தற்போது காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். மேலும் காய்ச்சல் பிரிவில் தினமும் 20 முதல் 30 பேர் வரை சராசரியாக குணம் அடைந்து வீடு திரும்புகின்றனர்.


தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி காய்ச்சல் பாதிப்பு என வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.