தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, உடல்நிலை சரியில்லாததால், அரூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அதேப் பகுதியை சேர்ந்த திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர், முருகேசன், (59) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். முருகேசன்  டிராவல்ஸ் வைத்துக் கொண்டு பைனான்ஸ் நடத்தி, பலருக்கு கடன் கொடுத்து வசூல் செய்தும் வருகிறார். இந்த சிறுமியின் தாயாரும் இவரிடம் பைனான்ஸ் பெற்று, திருப்பி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.




இந்நிலையில், மருத்துவமனைக்கு சென்ற 14 வயது சிறுமியை முருகேசன், இரவு நேரத்தில் வெளியில் வரக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுமியை அவரது அத்தை வீட்டில் விடுவதாக அழைத்துள்ளார். அப்போழுது சிறுமி வேண்டாம் என்று சொல்லியுள்ளார். ஆனால், அவர் கேட்காமல் கட்டாயப்படுத்தி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அத்தை வீட்டிற்கு அழைத்து செல்லாமல், சிறுமியின் அத்தை வீட்டிற்கு அருகில் உள்ள வேறு வழியில் சென்று வயல் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டு இருசக்கர வாகனத்தை நிறுத்த சொல்லி இறங்கியுள்ளார். அப்போது சிறுமியை திமுக நிர்வாகி முருகேசன், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து, பதறிப் போன சிறுமி, கதறி அழுதுள்ளார். அப்போது இதை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது,  மீறி சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என முருகேசன் மிரட்டியுள்ளார். அப்போது முருகேசனை, தள்ளி விட்டு ஓடி அருகில் இருந்த சிறுமியின் அத்தை வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது அத்தையிடம்  நடந்ததை சொல்லி அழுதுள்ளார்.


இதனைத் தொடர்ந்து சிறுமியின் அத்தை மூலம் சிறுமி அம்மாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி தனது அம்மாவுடன் அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து, அவரது தாய், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த திமுக பிரமுகர் முருகேசன், மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் முருகேசனை அழைத்து வந்து விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் அரூர் பகுதியில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக, பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.