சோதனைச் சாவடியில் விரட்டிப் பிடித்த போலீசார்


பெங்களூரில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழியாக குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் கடத்தப்படுவதாக தினமும் காவல் துறையினர் மாவட்ட எல்லையில் சோதனை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம்  வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை  கடத்தி செல்வதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், நேற்றிரவு காரிமங்கலம் அடுத்துள்ள கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் காரிமங்கலம் காவல் துறையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


கிருஷ்ணகிரி டூ சேலம் சென்ற காரில் குட்கா


அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு லாரியை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்திருந்தனர். அந்த நேரத்தில் சேலம் நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று, சோதனை சாவடியில் நின்றிருந்த லாரியை ஒதுங்கி விட்டு வேகமாக சென்றது.


அப்பொழுது சொகுசு கார் வருவதைக் கண்ட காவலர்கள், தடுத்து நிறுத்த முயற்சி செய்து, சொகுசு காரை நிறுத்துமாறு காவல் துறையினர் சைகை செய்தனர். ஆனால் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருப்பதை கண்டதும் காரை நிறுத்தாமல் மின்னல்  வேகத்தில் பறந்தனர்.



காவலர் நிறுத்தியும் நிற்காமல் சென்றதால் சந்தேகம் அடைந்து துரத்திய காவலர்கள்


ஆனால் காவல் துறையினர், கார் நிற்காமல் சென்றதால், சந்தேகம் அடைந்து காரை துரத்தி சென்றனர். தொடர்ந்து காவல் துறையினர் வாகனத்தின் மூலம் நிற்காமல் சென்ற காரை பின் தொடர்ந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துரத்தி சென்றனர். தொடர்ந்து திரைப்பட பாணியில் துரத்திச் சென்ற காவல் துறையினர் அகரம் பிரிவு சாலையில் காரை மடக்கி பிடித்தனர். அப்பொழுது காவல் துறை துரத்துவதை அறிந்த சொகுசு கார் ஓட்டுநர், காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகினார். இதனைத் தொடர்ந்து காரை காவல் துறையினர் சோதனை செய்தனர்.


காரில் நான்கு லட்சம் மதிப்பிலான குட்கா


அந்த காரில்  கர்நாடகாவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1 டன்  குட்கா மற்றும் பான் மசாலா  பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது,


அதனை தொடர்ந்து குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த காரிமங்கலம் காவல் துறையினர்,  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சொகுசு கார் பதிவெண்ணை வைத்து, தப்பி ஓடி தலைமறைவான சொகுசு கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். மேலும். குட்கா கடத்தி வந்த காரை காவல் துறையினர் சினிமா பாணியில் விரட்டி சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது  வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது.


காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு


இந்த சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று காவல்துறையினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் கடத்தல் காரை துரத்தி சென்று சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.