தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி கிராமத்தைச் சார்ந்த திலகர்-முத்து தம்பதியினருக்கு சுமத்ரா, கௌதம் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சாதாரண விவசாய கூலி வேலை செய்து வரும் திலகர், பிள்ளைகள் அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பேரிடர் காலத்தில், பள்ளி விடுமுறையில் இருந்த கௌதம், சொந்த ஊரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து கவுதம் மீது மோதி, பேருந்தின் சக்கரம் இரண்டு கால்களின் மீது ஏறியது. இதில் முழங்காலுக்கு மேல் சிறுவனது கால்கள் இரண்டும் நசுங்கியது. சிறுவனை மீட்டு பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்பொழுது சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவனின் கால் அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டு கால்களும் இல்லாத சிறுவனை பெற்றோர் சுமார் 4 மாத காலம் அரசு மருத்துவமனையில் வைத்து முழு சிகிச்சை பெற்று வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
மேலும் வீட்டிற்கு வந்த சிறுவனுக்கு கழிவறைக்கு செல்வது, குளிக்க வைப்பது, வெளியில் எங்கேயும் செல்ல வேண்டும் என்றால், எடுத்துச் செல்வது என அனைத்து வேலைகளையும் பெற்றோரே செய்து வந்துள்ளனர்.
மேலும் போதிய வருவாய் மற்றும் வசதி இல்லாத நிலையில், சிறுவனை பராமரிப்பதால் குடும்பத்திற்கு தேவையான வருவாய் ஈட்ட முடியாமல் தவித்து வந்தனர்.
இதனையடுத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில், சிறுவன் கௌதமிற்கு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த மூன்று சக்கர மிதிவண்டிகள் மூலம், சிறுவன் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். சிறுவனுக்கு உதவியாக சகோதரி சுமித்ரா மூன்று சக்கர மிதிவண்டியை தள்ளி சென்று பள்ளிக்கும், வீட்டிற்கு அழைத்துச் செல்வதுமாக இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டிற்குள் செல்வது, பள்ளிக்குள் வகுப்பறைக்குள் செல்வது போன்ற இடங்களுக்கு சிறுவன் கௌதம், கையால் உடலை முழுவதும் தூக்கிக் கொண்டு நடந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற போது, மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி மெணசி பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி வகுப்பறையில் ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது வகுப்பறைக்கு வெளியே மூன்று சக்கர மிதிவண்டி இருந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர், மிதிவண்டி குறித்து விசாரித்துள்ளார். அப்பொழுது விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த சிறுவன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவனைப் பார்த்து வேதனை அடைந்த மாவட்ட ஆட்சியர்
இதனையடுத்து சிறுவனை அழைத்து நேரில் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவர், சிறுவனின் நிலையை கண்டு வேதனை அடைந்துள்ளார்.
மாவட்ட இணை இயக்குனருக்கு உத்தரவிட்ட ஆட்சியர்
இதனை அடுத்து மாவட்ட ஊரக நல பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சாந்தியை தொடர்பு கொண்டு, சிறுவனின் நிலை குறித்தும் அவருக்கு செயற்கை கால்கள் பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த மருத்துவ இணை இயக்குனர் சாந்தி
இதனையத்து மருத்துவர் சாந்தி கோவையில் உள்ள தன்னுடன் பயின்ற மருத்துவர் வெற்றிவேல் செழியனை தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் செயற்கைக் கால் பொருத்த அறிவுறுத்தியது குறித்து தெரிவித்துள்ளார். அப்பொழுது அரசின் சார்பில் இரண்டு செயற்கை கால்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு செயற்கைக் கால் பொருத்துவதற்கு இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை செலவாகும் நிலையில், சிறுவனுக்கு அதிக கனம் இல்லாமல், எளிமையாக நடப்பதற்கு தேவையான 2 லட்சம் மதிப்புள்ள செயற்கை கால்களை அரசின் செலவிலேயே செய்து கொடுத்தனர்.
இதனை அடுத்து சிறுவனுக்கு இரண்டு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு, ஊன்றுகோல் துணையுடன் நடந்து செல்கிறார். மேலும் தற்பொழுது செயற்கை கால்கள் பொருத்திய நிலையில், தனியாக நடந்து வரும் சிறுவன் பள்ளிக்கு சென்று வருகிறார்.
மகிழ்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்
இதனால் மகனுக்கு செயற்கை கால் பொருத்தினால் ஐந்து லட்சம் வரை செலவாகும் எங்கே போவது என பெற்றோர் எண்ணியிருந்தனர். மேலும் மற்ற பிள்ளைகளை போல் தனது மகனும் செயற்கை கால் பொருத்தி நடப்பானா? என்ற ஏக்கத்தில் இருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் எதேர்ச்சையாக பார்த்து செயற்கை கால்கள் பொருத்தியதால், தங்களது மகன் இன்று மற்ற பிள்ளைகளை போல் நடந்து செல்வதை பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக பெற்றோரும், சிறுவன் கௌதமனும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சிறுவன் வளர வளர இந்த கால்களால் நடக்க முடியாது. எனவே வளரும் பருவத்தில் தேவையான அளவில் செயற்கை கால்களை பொருத்தி தர வேண்டுமென சிறுவனின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.