தருமபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வந்திருந்தார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த கே பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, வரும் ஏப்ரல் 2 முதல் 6-ம் தேதி வரை மதுரையில் நடத்துவது என கட்சியின் அரசியல் தலைமைக் குழு முடிவு செய்துள்ளது. இந்த மாநாட்டில் எங்கள் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்கின்றனர். அதற்கு முன்பு மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா முழுக்க இடதுசாரி கட்சிகள் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இதற்கான அடிப்படை காரணங்கள் உள்ளிட்டவை குறித்தும் மாநாட்டில் ஆய்வு செய்ய உள்ளோம்.
மனித கழிவுகளை மனிதர்களை அகற்றக்கூடாது
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியின்போது கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுக்க 433 பேர் உயிரிழந்திருப்பதாக துறை அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் புல்லட் ரயில் விடும் அளவிற்கு, நாம் வளர்ந்திருக்கிறோம். ஆனால் இன்னும் மனிதர்களே, மனித கழிவுகளை அகற்றி, உயிரிழப்பு ஏற்படுகிறது. இப்பணிகளுக்கு இயந்திரங்களை வாங்க உள்ளாட்சி அமைப்புகளிடம் பணம் இல்லை என மத்திய அமைச்சர் கூறியிருப்பது, அயோக்கியத் தனம். மத்திய அரசே இதற்கான நிதியை வழங்கி இயந்திரங்கள் வாங்கித் தர வேண்டும். இதுதவிர, மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை அரசு உருவாக்கித் தர வேண்டும்.
அருந்ததிய இன மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்
இன்று கலைஞரின் நினைவு நாள். காலைஞர் தான் அருந்தியர் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கியவர். இந்த சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள பாஜக அரசு முன்வர மறுக்கிறது. இதில், பிரதமர் மோடி பிடிவாதமாக இருக்கிறார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் வருவதை ஏற்க பாஜக அரசுக்கு மனமில்லை. வருணாசிரம கோட்பாடு தான் அவர்களை தடுக்கிறது.
காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் விரைவு படுத்த வேண்டும்
கர்நாடகா மாநில அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தற்போது பெய்த கனமழையின்போது தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் தமிழகத்தை நோக்கி திறந்து விட்டுள்ளனர். இதில் சுமார் 70 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிறது. முந்தைய மாதங்களிலேயே தண்ணீரை திறந்திருந்தால், அது வீணாகாமல் பயன்பட்டிருக்கும். ஒகேனக்கல் உபரி நீரை நீரேற்றும் திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வழங்கி, பின் தங்கிய தருமபுரி மாவட்டத்தை வளப்படுத்த வேணாடும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், ஆமை வேகத்தில் நடைபெறுகிறது, இதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
பட்டியல் சமூக இளைஞர்களை தான் ஆணவ படுகொலை செய்வார்கள் அது இன்று பட்டியல் சமூகத்திற்குள்ளும் வந்திருப்பது வேதனை
தருமபுரியில் இசுலாம் இளைஞரும் பட்டியல் இன இளம்பெண்ணும் காதலித்த விவகாரத்தில், அந்த பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்ட 4 இளைஞர்கள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். கடந்த காலங்களில் பட்டியல் என இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டால் ஆணவக் கொலை நடைபெறும். ஆனால் தற்பொழுது பட்டியல் இனத்தவரும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. பொருளாதார சூழலே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்தவே ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கேட்கிறோம். நடைமுறையில் உள்ள சட்டங்களே போதும் என முதல்வர் கூறினாலும் புதிய சட்டம் அவசியமாக உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் குறிப்பிடவில்லை
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் குறிப்பிடப்படவில்லை. அதற்கு விமர்சனங்கள் எழுந்த போது பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் வர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை முன்னிறுத்த வேண்டுமே தவிர, பாஜகவின் ஊதுகோலாக அன்புமணி இருக்கக் கூடாது.
எல்லா அரசு மருத்துவமனைகளிலும் அமரர் ஊர்தி கட்டாயப்படுத்த வேண்டும்
அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெறும்போது உயிரிழப்பவர்களின் உடல்களை கொண்டு செல்ல ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் இறந்தவரின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற சம்பவத்தை செய்தி வாயிலாக அறிந்தோம். எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அரசு சார்பில் இதற்கான வாகன வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என தெரிவித்தார்