தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோதினி என்பவர் பொறியியல் படித்துள்ளார். மேலும் அரசாங்க வேலை வேண்டி பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது நண்பர் மூலம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் சௌந்தரம், சக்திவேல் அவரது மனைவி ரூபினி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிமுகம் கிடைத்துள்ளது.


அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை:


அப்போது சௌந்தரம் என்பவர், தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், பல பேருக்கு பல்வேறு துறைகளை அரசு வேலை வாங்கித் தந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் நீங்களும் பணம் கொடுத்தால் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். அப்போது அவரது அண்ணன்கள் சக்திவேல் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் பாஞ்சாலை அண்ணி ரூபிணி ஆகியோர் உடன் இருந்துள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் சேர்ந்து தைரியமாக பணம் கொடுங்கள் என்றும், உங்களைப்போல் படித்துவிட்டு வேலை இல்லாதவர்களை அழைத்து வாருங்கள், அவருக்கும் அரசு வேலை வாங்கி தரலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.


 



போலியான பணி நியமன ஆணை


இதனை நம்பிய வினோதினி  நேரடியாகவும் . வங்கி கணக்கு மூலமாகவும் பணம் கொடுத்துள்ளார். வினோதினியிடம் மட்டுமின்றி பலரிடமும் இந்திய உணவுக் கழகத்தில் வேலை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை என பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார். வினோதினிக்கு இந்திய உணவுக் கழகத்தில் வேலைக்கான பணி உத்தரவை கொடுத்துள்ளார். இந்த பணி நியமன ஆணை குறித்து விசாரித்தபோது போலி உத்தரவு என தெரியவந்துள்ளது. இதேபோல் ஆனந்தன், கண்ணன், ராஜசேகர், சிலம்பரசன் என்பவர்களுக்கும் இந்திய உணவுக் கழகத்தில் போலியான பணி நியமன உத்தரவை கொடுத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பணி நியமன உத்தரவு போலி என்று தெரிந்து கொண்டனர்.


கொலை மிரட்டல்


இதனையறிந்து பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து சௌந்தரத்திடம் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஏழுமலை என்பவர் பாதிக்கப்பட்டவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் . இதனால் அச்சமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


இந்த மனுவில், எங்களை ஏமாற்றிய பணத்தில் தான் அந்த கும்பல் காரிமங்கலத்தில் கல்லூரி ஆரம்பித்ததாகவும், பல இடங்களில் விவசாய நிலங்கள் வாங்கி இருப்பதாகவும், தெரிய வருகிறது. எனவே இதே போல் பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஐந்து கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீண்டு தரவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.