தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிப்பட்டி கிராமத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து  கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு கீழ் வரும் பூச்செட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது ஜோதிஅள்ளி (ஜோதிபட்டி), கரம்பு, காட்டுக்கொட்டாய், குட்டைசந்து, சிக்ககொல்ல அள்ளி, ரங்கம்பட்டி, மாவேரி கொட்டாய், பட்ரஅள்ளி ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளன. இந்த கிராமங்களையொட்டி சேலம்-பெங்களூரு ரயில் வழித்தடம் அமைந்துள்ளது.  இந்த ரயில்பாதையை பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் இப்பகுதியில் ரயில்வே கேட் அல்லது பாலம் போன்ற வசதி இல்லை. இங்குள்ள குழந்தைகள் பள்ளி மேல்நிலைக் கல்விக்கு அமானி மல்லாபுரம், பாலக்கோடு ஆகிய இடங்களுக்கு ரயில் பாதையை ஆபத்தான நிலையில் கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதுதவிர, மருத்துவமனைக்கு செல்வோர், கால்நடைகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வோர், இதர தேவைகளுக்காக செல்வோர் என அனைவரும் இதே நிலையில் தான் செல்கின்றனர். அவசர சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற வாகனங்களும், வேளாண் தேவைகளுக்கான வாகனங்களும் இந்த கிராமத்துக்கு செல்ல கூடுதலாக 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. 



 

இதற்கு தீர்வாக அப்பகுதியில் ரயில் பாதையை பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துத் தர வேண்டுமென கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், இந்த கோரிக்கை கிடப்பிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கள் கிராம கோரிக்கையை நிறைவேற்றாவிடில் மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என கிராமத்தில் பேனர் வைத்ததுடன், கடந்த ஜனவரி மாதம் இப்பகுதி மக்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனுவையும் அளித்தனர். அதன்பிறகும், கோரிக்கை நிறைவேற்றுவதற்கான சூழல் ஏற்படாததால் இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, “பிரதான அடிப்படை வசதியான பாதை வசதி இல்லாமல் பல தலைமுறையாக சிரமம் அனுபவித்து வருகிறோம். அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் சிறு முன்னேற்றமும் ஏற்படவில்லை. எங்கள் கோரிக்கை கிடப்பில் இருப்பதால் நாங்கள் படும் துயரங்களையும், வலியையும் யாருமே உணர்ந்ததாக தெரியவில்லை. எனவே, கோரிக்கை நிறைவேறும்வரை எந்த தேர்தலிலும் வாக்களிப்பதில்லை என்று உறுதியாக இருக்கிறோம்” என்றார்.



 

ஜோதி அள்ளி நடுநிலைப் பள்ளிக்கு உட்பட்ட 1,400-க்கும் மேற்பட்ட வாக்காளர்களும், பட்ரஅள்ளி உயர்நிலைப் பள்ளிக்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்களும், தேர்தலை புறக்கணித்து  யாரும் வாக்கு செலுத்த செல்லாததால் வாக்கு சாவடி மையத்தில் யாரும் இல்லாமல் தேர்தல் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் வாக்குச்சாவடியில் மையத்தில் கட்சி முகவர்கள் கூட யாரும் இல்லாத நிலை உள்ளது.  இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்கள் யாரும் இதுவரை வாக்கு செலுத்த வரவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர்  கிராமத்திற்கு நேரில் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி  வழங்கினால், அனைவரும் வாக்கு செலுத்த தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.



 

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, பாலக்கோடு வட்டாட்சியர் ஆறுமுகம், பாலக்கோடு டிஎஸ்பி சிந்து உள்ளிட்டார் அடங்கிய அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து கிராம மக்கள் கொடுத்த மனுக்களின் மீது ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்து ஓராண்டிற்குள்ளாக இந்த பொது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். அதனால் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் வாக்களிப்பதாக ஒப்புக்கொண்டனர். இதனால் வாக்குப்பதிவு தொடங்கி 4 மணி நேரத்திற்கு பிறகு ஜோதிஹள்ளி கிராம மக்கள் வாக்களிக்க தொடங்கினார். மேலும் ஆறு மணிக்கு முன்பு வாக்குச்சாவடிக்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்படும் என தெரிவித்தனர்.