2026 தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நிலையில், அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்களை உருவாக்கியும், சரியாக செயல்படாதவர்களை மாற்றியும் திமுக தலைமை அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் புதியவர்களுக்கும் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து திமுகவில் வந்து இணைந்தவர்களுக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கிவிட்டு காலம் காலமாக திமுகவிற்காக உழைத்தவர்களை தலைமை கண்டுக்கொள்வதாக பல்வேறு மாவட்டங்களில் திமுக நிர்வாகிகள் கொந்தளித்து வருகின்றனர்.
ஈரோடு திமுகவில் கலகம்
குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் அதிமுக நிர்வாகியாகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் சில மாதங்களுக்கு முன்னர் இணைந்த நிலையில், அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த மாவட்டத்திலேயே கடும் எதிர்ப்பு நிலவி வருவதாகவும் இது குறித்து ஒன்றியச் செயலாளர் ஒருவர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமிக்கும் திமுக தலைமைக்கு புகார் கடிதம எழுதியுள்ளதாகவும் கடந்த வாரம் வெளியான தகவலால் ஈரோடு திமுகவே தகித்து கிடந்தது.
தருமபுரியில் வெடித்தது உட்கட்சி மோதல்
இந்நிலையில், தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றிய தடங்கம் சுப்பிரமணியன் என்பவரை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக, தர்மசெல்வன் என்பவரை தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக அறிவித்துள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். இதற்கு அந்த மாவட்ட திமுகவின் முக்கியப் புள்ளியும் முன்னாள் எம்.எ.ஏவுமான, இன்பசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
கட்சியை அழிக்க நினைத்தவருக்கு பதவியா ? கொந்தளிப்பில் இன்பசேகரன் வெளியிட்ட ஆடியோ
தனது முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள ஆடியோ ஒன்றில் புதியாக மாவட்ட பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட தர்மசெல்வன், பாமக நிர்வாகி ஒருவருடன் உரையாடுகிறார். அதில், திமுக நிர்வாகியான இன்பசேகரனை காலி செய்தால்தான், நமக்கு மாவட்டத்தில் எதிர்காலம் இருக்குன் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும், தொழில், பணம் தொடர்பாகவும் பேசியிருக்கின்றனர்.
இந்த ஆடியோவை பகிர்ந்து இன்பசேகரன் வெளியிட்டுள்ள பதிவில், ”நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் ,மாவட்ட செயலாளராக இருந்த போதும், ரத்தமும் சதையுமாய் கழகத்தை வளர்த்து, என்னால் இயன்ற முழு உழைப்பை செலுத்தி வளர்த்த இயக்கத்தை, அழித்து ஒழிக்க இது போன்ற திட்டங்களை தீட்டி, எந்த ஒரு தார்மீக உரிமையும் இன்றி, தலைமைக்கோ, தலைவருக்கோ எந்த ஒரு அறிமுகமோ, அடையாளமோ இல்லாத இந்த நபர் இன்று புறவாசல் வழியாக மாவட்ட செயலாளர் பதவியை பெற்றிருக்கிறார்.
கழகத்தை எதிர்க்கட்சியுடன்(பாமக+அதிமுக) கூட்டணி சேர்ந்து கொண்டு ஒழிக்க நினைத்தவர் கழகத்தின் உயரிய பொறுப்பான மாவட்ட செயலாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்தானா? இதோ உங்கள் பார்வைக்கு” என்று அந்த பதிவு மூலம் இன்பசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்
தருமபுரி திமுகவினர் அதிர்ச்சி
தருமசெல்வன் பாமக நிர்வாகி ஒருவருடன் உரையாடும் ஆடியோவை இன்பச்சேகரன் வெளியிட்டுள்ளதை கண்டு தருமபுரி திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து திமுக தலைமைக்கு அவர்கள் கடிதம் எழுதவும் தயாராகி வருவதாகவும் அவர்களை இன்பசேகரன் ஒருங்கிணைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.