ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, தருமபுரி அருகே பதினெட்டாம் போர்களம் நாடகத்தினை தத்தரூபமாக நடித்த கலைஞர்கள்-திரௌபதி அம்மன் கோவிலில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
தருமபுரி மாவட்டத்தில் ஆடி பதினெட்டு தினத்தில் ஆடிப் பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் புதுமண தம்பதிகள் காவிரி ஆறு, தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் புனித நீராடி தாலி நான்களை பிரித்து கோர்த்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். அதே போல் கிராமப் புறங்களில் உள்ள கோவில் தெய்வங்களை, புது வெள்ளம் ஓடுகின்ற ஆற்றங்கரைக்கு கொண்டு வந்து, புனித நீராட வைத்து பூஜை செய்து வழிபடுவதும், பாரம்பரிய தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழாக்கள் வழக்கம். அதேப்போல் ஆடி பதினெட்டாம் நாள் மகாபாரத போரில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் கௌரவர்களை வீழ்த்தி பாண்டவர்கள் வெற்றி பெற்ற தினமாக கொண்டாடுகின்றனர்.
இதனை நினைவுகூறும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆடி ஒன்று முதல் 18ஆம் தேதி வரை தினமும் பாரதம் நடைபெறும்.
இதில் பதினெட்டாம் நாள் பாரதத்தில் பதினெட்டாம் போர் களம் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியில் பதினெட்டாம் போர்களம் தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை துரியோதனன், பீமன், கிருஷ்ணர் வேடமணிந்த தெருக்கூத்து கலைஞர்கள் ஊர் முழுவதும் சுற்றி வந்து ஊரின் மையப் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு முன்பாக வந்தனர்.
அங்கு துரியோதனன் உருவத்தை மண்ணால் செய்திருந்தனர். அங்கு திரௌபதி, கிருஷ்ணர், பீமன், நகுலன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு மகாபாரத காட்சிகளை தத்ரூபமாக நடித்து காட்டினர். அதில் பீமன் துரியோதனனை தனது ஆயுதத்தால் வீழ்த்தி துரியோதனனின் ரத்தத்தை எடுத்து திரௌபதியின் கூந்தலில் தடவி சபதத்தை முடிக்கும் காட்சியினை தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.
இதனை அடுத்து சுவாமி கங்கை பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுவாமிக்கு புனித அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் சாமியுடன் பக்தர்கள் பூ மிதித்தனர்.
இந்த ஆடிப் பெருக்கு விழாவில், தருமபுரி, அன்னசாகரம், ஏ.கொல்லஹள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு சில கிராமங்களில் பதினெட்டாம் போர் களம் முடித்து ஆடிப் பெருக்கு விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இது போன்ற மகாபாரதப் போர் நாடகங்கள் நடத்துவதினால் நல்ல மழை பெருகும் ஊர் செழிக்கும் உலக மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.
இந்த தெருக்கூத்து நாடகத்தை சிறியவர்கள் பெரியவர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஆர்வம் காட்டி பார்த்து ரசிக்கின்றனர். 18 நாட்கள் நடைபெறும் இந்த தெருக்கூத்து நாடகம் ஆடிப்பெருக்கு நாட்களில் மட்டும் சிறப்பாக நடைபெறும்.