தருமபுரி மாவட்டத்தில் 1613 இடங்களில் இன்று (1ம்தேதி) முதல் வரும் 31ம்தேதி வரை வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள 1.31 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ திரவம் வழங்கப்படுகிறது.




வளரும் நாடுகளில் சத்துகுறைபாட்டினால் குழந்தைகளில் பார்வை குறைபாடு ஏற்பட்டு வருகிறது. வைட்டமின் குறைபாட்டினால் கண்பார்வை குறைபாடு அதிகம் ஏற்பட்டு வருவது தெரியந்ததையடுத்து வைட்டமின் ஏ திரவம் மற்றும் மாத்திரை வழங்கப்படுகிறது. 


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் அவ்வை நகர் அங்கன்வாடி மையத்தில் இம்முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி தொடங்கி வைத்தார். மேலும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.


 தமிழக அரசு குழந்தைகளின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி தமிழக அரசின் மக்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு "தேசிய வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படுகிறது. திரவத்தின் மூலம் கண்பார்வை குறைபாடு சீர் செய்ய ஒரு காரணமாக உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 1336 அங்கன்வாடி மையத்திலும், 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 225 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடக்கிறது.


இந்த விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமுடன் இணைந்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இழப்பை தடுக்க தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமும் நடைபெறுகிறது.


இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது: தமிழக அரசின் மக்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு "தேசிய வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்" தருமபுரி மாவட்டத்தில் இன்று (1ம்தேதி) முதல் வரும் 31ம்தேதி வரை வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடக்கிறது.


இத்திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 1.31 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. வைட்டமின் -ஏ சத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மைக்கும் மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும்.


மேலும் வைட்டமின்-ஏ சத்து, கண்குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். வைட்டமின்-ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி. அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி அளவும் வழங்கப்பட உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.


மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த முகமுடன் இணைந்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நல துறையின் சார்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இழப்பை தடுக்கும் வகையில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் இரண்டு உப்பு சக்கரை கரைசல் பொட்டலங்கள் மற்றும் 14 துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.