தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பேலாரஹள்ளி அருகே செம்ம நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சக்திவேல் (வயது 31) எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வருகிறார். முருகேசன் மனைவி இந்துமதி 26 இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வயதில் மேகவர்ஷினி என்ற மகளும், மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று சக்திவேல் தனது மனைவி குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் கந்திகுப்பம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் பெரிய பணமுட்லு என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஊத்தங்கரை அருகே காக்கங்கரை பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அதி வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்தக் கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு சாலையில் அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது எதிரே சக்திவேல் குடும்பத்தினர் வந்த இரு சக்கர வாகனம் மீது கார் வேகமாக மோதியது. தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீதும் கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல் மற்றும் மனைவி குழந்தைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த அஞ்சூரை சேர்ந்த யாசின் அலி 35 ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தால் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டதில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே யாசின் அலி, குழந்தைகள் மேகவர்ஷினி, 3 மாத ஆண் குழந்தை உள்ளிட்ட மூன்று பேரும் பரிதாபமாக இருந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய சக்திவேல் அவரது மனைவி இந்துமதி ஆகியோர் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து நடந்த இடத்தில் கந்திகுப்பம் காவல் துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த விபத்துக்கு குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் வண்டியை அப்படியே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பித்து ஓடியவர் குறித்தும், கார் நம்பர் பிளேட்டை வைத்து அவர்களது முகவரியை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அருகே சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார் மோதியதில் இரண்டு குழந்தைகள் ஒரு ஆண் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.