சூர்யா மற்றும் ஜோதிகாவின் சொந்த பட நிறுவனம் 2டி என்டர்டெயின்மெண்ட். சமீபத்தில் இந்நிறுவனம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமுடன் ஒரு ஒப்பந்ததை மேற்கொண்டது. அதன்படி, 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் 4 படங்கள் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடித்த 'சூரரை போற்று' மற்றும் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியாகின. இந்த படங்களின் வரவேற்பைத் தொடர்ந்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைமில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. அதன்படி 'ஜெய்பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்' மற்றும் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய 4 படங்கள் இந்த ரிலீஸ் பட்டியலில் இடம்பெற்றன. அந்த வரிசையில் முதலாவதாக நடிகை ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’படம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி வெளியானது
காளை மாடுகளைக் குழந்தைகளாக வளர்க்கும் தம்பதிகளுக்குத் திடீரென காளை மாடுகள் காணாமல் போகும் போது என்ன மனநிலை இருக்கும் என்பதில் தொடங்கி, கிராமங்களின் அரசியலைப் பேச முயன்றது`இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி ராமனின் ஆட்சியிலும், ராவணனின் ஆட்சியிலும் ஏழை, கிராம மக்களின் நிலையில் மாற்றங்கள் நிகழ்வதில்லை என்ற பொருளில் இந்தத் தலைப்பைச் சூட்டியிருந்தார். காணாமல் போன காளைகளில் தொடங்கி, க்ளைமேக்ஸ் வரை `சோசியல் மெசேஜ் வகுப்பு’ பார்வையாளர்களுக்கு அதீதமாகக் கதைக்குத் தொடர்பில்லாமல் திணிக்கப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இந்தப் படம் 2016-ல் வெளிவந்த மராத்தி திரைப்படமான ‘ரங்கா படாங்கா’ படத்தின் கதையைத் திருடி எடுக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்பின்தான் அது ஒரு மராட்டிய படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கே தெரிந்திருக்கிறது. படத்தின் பில்கள் வங்கிக்கணக்கில் செலுத்துவது முதல் பல்வேறு விஷயங்களில் தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார் நடிகர் சூர்யா. அவருக்கு இந்த கதைத்திருட்டு சம்பவம் எரிச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’படத்தின் இயக்குனர் அரிசில் மூர்த்தியை நேரில் அழைத்து பேசியுள்ளார். படத்தின் கதை வேறொரு படத்திலிருந்து எடுக்கப்பட்டதை ஏன் சொல்லவில்லை என சூடாகியுள்ளார்.
இதனையடுத்து தனது நிறுவனத்தின் தவறை உணர்ந்த சூர்யா மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட் தொகையைத் தர முன்வந்துள்ளார். இப்படித் தானாக முன்வந்து நஷ்டஈடு கொடுப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. சூரியாவின் ஜென்டில் மேன் தனத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.