நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


தமிழ்நாட்டின் முதல்வராக ஆக உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த 3ஆம் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தஆலோசனைக்கு பிறகு தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்,  தமிழ்நாட்டில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கடந்த 4ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.


அதன்படி, புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இன்று காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.


 


புதிய கட்டுப்பாடுகள் விவரங்கள்


* அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும்.


 


* பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனியார் மற்றும் அரசு பேருந்துகள், டாக்ஸியில் 50 சதவித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.


 


* மளிகை, காய்கறி கடைகள், குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.  


* தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி. 


* மாநகராட்சி, நகராட்சியை தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க தடை 


* மீன் மற்றும் இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.


* அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் திறக்க தடை.


* ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. உணவு விடுதிகள், ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் மெஸ் ஆகிய இடங்களில் இருந்து உணவு பார்சல்களை மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும். 


*வணிக வளாகங்களில் செயல்படும் மளிகை மற்றும் பலசரக்கு கடைகளுக்கு அனுமதி இல்லை.


* பெட்ரோல் நிலையங்கள் இயங்கும்.


* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குளில் 25 நபர்களுக்கு பதில் 20 நபர்கள் மட்டுமே அனுமதி.


அரசின் இந்த புதிய அறிவிப்புகள் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் அதை பின்பற்றி அனைவரும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்துவதற்கு முன் பொதுமக்கள் ஒத்துழைத்தால் இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்ப வாய்ப்புள்ளது.