டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இடைவிடாமல் கனமழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருவாரூர் வண்டிக்கார தெரு பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதே போன்று கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விளை நிலங்கள் ஆகிய இடங்களில் மழை நீர் முற்றிலுமாக சூழ்ந்துள்ளது. குறிப்பாக திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட நெய்விளக்கு தோப்பு இராணுவ நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளை முற்றிலுமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கும் பொழுது ஆண்டுதோறும் மழை பெய்யும் பொழுது இந்த பிரச்சினையை நாங்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். இதற்கான தீர்வு என்பது இதுவரை காணப்படவில்லை பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை, ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேபோன்று திருவாரூர் குழுந்தான் குல தெருவில் வீடுகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் அந்த பகுதியில் வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் மக்கள் ஆளாகியுள்ளனர். ஆகவே அந்த பகுதியில் உள்ள மக்களை தங்க வைப்பதற்கு மாற்று இடம் உடனடியாக தயார் செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனிடம் வேண்டுகோள் விடுத்தனர் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்து அந்த பகுதி மக்களுக்கு மதிய உணவினை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார். மேலும் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை மாற்று இடத்திற்கு கொண்டு சென்று அங்கு தங்க வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள திருவாரூர் நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் நிரந்தர தீர்வு காண புதிய வடிகால் உருவாக்கப்பட்டு அங்கு தண்ணீர் தேங்காத வாறு இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது திமுக திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செந்தில் திருவாரூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி சின்னா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்