பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு யூ டியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துகளையும், சர்ச்சை கருத்துக்களையும் அவர் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார்.


சவுக்கு சங்கர் கைது


இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கியிருப்பது மாநகர சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி சென்ற சைபர் கிரைம் காவல் துறையினர், அங்கு தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலையில் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல் துறை அலுவலகத்திற்கு தேனியில் இருந்து காவல் துறையினர் அழைத்து வருகின்றனர். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.




விபத்துக்குள்ளான வாகனம்


இதனிடையே சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சிறிய விபத்துக்கு உள்ளானது. போலீஸ் வாகனம் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கோவைக்கு வரும் வழியில் இருந்த ஒரு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்னர், கோவைக்கு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல் துறையினர் அழைத்து வருகின்றனர்