திருப்பூரில் மாட்டு சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சமூகத்தின் நஞ்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்தல், போதைப்பொருட்களை பறிமுதல் செய்தல் மற்றும் கண்காணிப்பு பணிகள் என காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் - மங்களம் சாலையில் உள்ள பழக்குடோன் என்ற பகுதியில், மத்திய காவல் நிலைய ரோந்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம் கஞ்சா போன்ற பொட்டலம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்களது பெயர் லோகநாதன் (22), உமா மகேஸ்வரன் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் காவல் துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில், மங்கலம் சாலையில், 33 ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், எடை அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்து பிரித்து பார்த்த போது, மாட்டு சாணம், வைக்கோல் கலந்து கஞ்சா என விற்று மோசடி செய்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் கேவிஆர் நகரை சேர்ந்த சாரதி (21), கவின் (22) ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். லோகநாதன், உமா மகேஸ்வரன், சாரதி, கவின் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். பின்னர் 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து பொதுமக்கள் தயங்காமல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். திருப்பூரில் கஞ்சா எனக்கூறி மாட்டு சாணத்தை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.