கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பந்தய சாலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்தப் பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் பந்தய சாலை நடைபாதையில் வரும் பெண்களிடம் ஹிஜாப் அணிந்தால் எப்படி இருக்கிறீர்கள்? என AL Kaswa TV என்ற யூ டியூப் சார்பில் Hijab Challenge என்பதை அனாஸ் அகமது (22) என்பவர் நடத்தியுள்ளார். அப்பகுதியில் வரும் பெண்களுக்கு பர்தா அணிவித்து அவர் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
அதில் அப்பகுதியில் வரும் பெண்கள் மற்றும் மாணவிகளிடம் ஹிஜாபை அணிவித்து, அதில் நீங்கள் ஹிஜாப், பர்தா அணிந்து எவ்வளவு க்யூட்டாக அழகாக இருக்கிறீர்கள் எனவும், ஹிஜாப் உங்களுக்கு பிட் ஆக இருக்கிறது எனவும் கூறிய அவர், நீங்கள் ஹிஜாப்பில் எவ்வளவு அழகாக இருப்பதை காண்பிக்கிறோம் என பெண்களை செல்போனில் போட்டோ எடுத்து அவர்களுக்கு காண்பித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை பார்த்த பல்வேறு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் கணபதி பகுதியைச் சேர்ந்த குமரேசன் அளித்த புகார் மனு அடிப்படையில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் யூ டியூபர் அனாஸ் அகமதுவை காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட அனாஸ் அகமதுவை கோவை ஒருங்கிணைந்த 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். வருகின்ற 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் தொழில் ஏஜெண்ட்கள் கைது
இதேபோல கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, கோவை மாநகர காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து விசாரணையில் களமிறங்கிய கோவை தனிப்படை காவல் துறையினர், மேற்குவங்கத்தில் பதுங்கி இருந்த பாலியல் தொழிலின் மூளையாக செயல்பட்ட சிக்கந்தர் பாதுஷா (41) மற்றும் ஏஜெண்ட் ஸ்டீபன் ராஜ் (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆள் இந்தியா ஏஜென்ட் குருப் என்ற வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்தி, 117 இந்தியா மற்றும் ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள ஏஜென்ட்கள் மூலம் பாலியல் தொழில் செய்வது தெரியவந்தது. கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட்டல்களில், நீண்ட நாட்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 சிம்கார்டுகள், 16 செல்போன்கள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கபீர் சிங் என்பவரை தேடி வருவதாக, துணை காவல் ஆணையர் ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ”இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும் 117 நபர்களை பிடிக்க 12 பேர் கொண்ட நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் பாதுஷா மீது கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 13 வழக்குகள் கோவையில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் மீது பதிவு செய்யப்பட்ட விபச்சார குற்ற வழக்குகளில் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் பாலியல் தொழில் கிடைத்த லாப பணத்தில் பெங்களூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். ஹோட்டல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்