மாநாடு திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல நடிகர் சிலம்பரசன், இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோருக்கு கம்பேக் திரைப்படமாகவும் பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாநாடு படத்தினை பயன்படுத்தி, இளைஞர் காங்கிரசார் கட்சி பதவிகளில் வெற்றி பெற இளைஞர்களை சேர்த்து அக்கட்சியில் சேர்த்து வாக்களிக்க செய்து வருகின்றனர்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநிலம், மாவட்டம், தொகுதி வாரியாக இளைஞர் காங்கிரசில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, IYC என்ற பிரத்யேக செயலி மூலம் கடந்த நவம்பர் 7 ம் தேதி முதல் டிசம்பர் 7 ம் தேதி வரை தேர்தல்  நடைபெற்று வருகிறது. இதில் 19 வயது முதல் 35 வயது வரையுள்ள கட்சியின் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க இயலும். கடந்த ஒரு மாதமாக செயலி மூலம் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் நிறைவடைய சில தினங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் கோவையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நூதன முறையில்  இளைஞர்களை கட்சியில் சேர்த்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.




கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு  திரையரங்கில் முகாமிட்டுள்ள அக்கட்சியினர் மாநாடு படம் பார்க்க வரும் இளைஞர்களிடம் இலவசமாக டிக்கெட் கொடுப்பதாகவும் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் மட்டும் கொண்டு வந்தால் போதும் என தெரிவிக்கின்றனர். அவற்றை கொண்டு வரும் இளைஞர்களை, காங்கிரஸ் கமிட்டியின் பிரத்யேக செயலி மூலம் ஆதார் கார்டு, ஒட்டுனர் உரிமம் போன்றவற்றை பயன்படுத்தி உறுப்பினராக்குகின்றனர. உறுப்பினராவதற்கு கட்டணமாக 50 ரூபாயினை அவர்களே செலுத்தி கொள்ளும் காங்கிரஸ் கட்சியினர், அந்த செல்போனுக்கு வரும் OTP எண் மூலம் தங்கள் அணியினருக்கு  வாக்குகளை செலுத்தி கொள்கின்றனர். பின்னர்  அடையாள அட்டை கொண்டு வந்த இளைஞர்களுக்கு மாநாடு திரைப்பட டிக்கெட்டை இலவசமாக கொடுத்து அனுப்புகின்றனர்.  






இளைஞர் காங்கிரஸ் பதவிகளை பெற அக்கட்சியினர் இலவச சினிமா டிக்கெட் ஆசை காட்டி, நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் காட்சிகளை அந்த திரையரங்கிற்கு சென்ற நபர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்க பிரத்யேக செயலி மூலம் அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தாலும், இளைஞர் காங்கிரஸ் பதவிகளை  பெற அக்கட்சியினர் , இலவச சினிமா டிக்கெட் ஆசை காட்டி, நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்