குழந்தைகளுக்கு டெங்கு...அத்துமீறும் வனத்துறை... ததும்பும் மேட்டூர் அணை... கோவை மண்டல முக்கிய செய்திகள்!
கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள், தொடரும் மழை உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...
Continues below advertisement

கோவை டவுன்ஹால்
- ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற போதும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- கோவை மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 17 குழந்தைகள் உட்பட 20 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கோவையில் கடந்த 4நாட்களாக கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் உயர்ந்து வருகிறது. அதேபோல நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
- கோவையில் தொடர்ந்து வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்று மழைப்பொழிவு இல்லாத நிலையில், இன்று காலையில் மாநகர பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், இன்றும் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தெப்பக்குளமேடு என்ற வனப்பகுதியில் அரசு பழங்குடியினருக்கு பட்டா வழங்கி இருந்தது. அந்த இடத்தில் குடிசைகளை பழங்குடிகள அமைத்து வந்த நிலையில், கூடுதல் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக வனத்துறையினர் குடிசைகளை அகற்றினர். இதற்கு பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் வரத்து 13,500 கன அடியாகவும், அணையில் இருந்து உபரி நீராக 13,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற திமுக அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பாரம்பரியம் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் நடைமுறையை மாற்றுவதற்காக மக்கள் யாரும் திமுகவிற்கு ஓட்டுப் போடவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சேலத்தில் பேட்டியளித்தார்.
- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில், பதிவேடுகளை முறையாக பராமரிக்காமல், நிர்வாக ரீதியான பணிகளை நிலுவையில் வைத்திருந்த காரணத்திற்காக வட்டார கல்வி அலுவலர் முருகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி நடவடிக்கை எடுத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த சித்தேரி மலைவாழ் மக்கள் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட சென்று மர்மமாக உயிரிழந்து வருவது தொடர்பாக இடைத்தரகரை பிடித்து அரூர் தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, 10-ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.