நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் (37). திருநங்கையான இவர், ஐடி நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வடவள்ளி அடுத்த மருதமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள மாசிலாமணி (33) என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். மேலும் மாசிலாமணி மற்றும் அவருடன் தங்கி இருக்கும் மணி, தனலட்சுமி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.


திருநங்கை கொலை:


இந்த நிலையில் தனலட்சுமி கடந்த 30ம் தேதியன்று மாசிலாமணி வீட்டுக்கு வந்துள்ளார். மூவரும் வீட்டில் இருந்த நிலையில், மாசிலாமணி மற்றும் மணி  இருவரும் மாலை 4 மணிக்கு வெளியே சென்றுள்ளனர். பின்னர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.  


இது குறித்து வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கடந்த செப்டம்பர் மாதம் தனது வீட்டில் இருந்து அவரது நண்பர் மணிகண்டன் உடன் வெளியே வந்த போது ரோட்டில் நின்றுகொண்டிருந்த சென்னையை சேர்ந்த தினேஷ் (எ) தினேஷ் கந்தசாமி என்பவருடன் வண்டியை தள்ளி நிறுத்தச் சொல்லும்போது ஒரு சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாசிலாமணி மீது கோபத்தில் இருந்த தினேஷ், அவரை கொல்லும் நோக்கில் கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்துள்ளார். மாசிலாமணியை கொல்வதற்காக இரண்டு கத்திகளை வாங்கிக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் வீட்டில் இல்லாததால் திரும்ப வந்து அந்த கத்தியை மறைத்து வைத்துள்ளார்.


ஆள் மாற்றி கொலை:


பின்னர் அடுத்த நாள் மாசிலாமணியை நோட்டமிட சென்ற தினேஷை, அவரது பெற்றோர் முன்பு திட்டியதால்  கோபமடைந்த அவர் பழிவாங்க வேண்டுமென முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 29 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த தினேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு மாசிலாமணி வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு படுத்திருந்த திருநங்கை தனலட்சுமியை மாசிலாமணி என நினைத்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.


அங்கிருந்து தப்பிச்சென்ற தினேசை மொட்டை அடித்துக் கொண்டு மதுரைக்கு சென்றதும் தெரியவந்தது. பின்னர் தவறாக கொலை செய்திருப்பதை அறிந்து மாசிலாமணியை கொலை செய்ய மீண்டும் மருதமலை வந்த தினேஷை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் தினேஷை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். திருநங்கை உடன் ஏற்பட்ட தகராறில் வேறொரு திருநங்கையை ஆள்மாற்றி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.