கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகள் அடர் வனப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த வனப்பகுதிகள் பல்லுயிர் பெருக்கத்தின் புகலிடமாக விளங்குவதோடு, வனவிலங்குகளுக்கு வாழ்விடமாகவும், அரிய வகை மூலிகைகளுக்கு உறைவிடமாகவும் உள்ளது.
காட்டுத்தீ:
குறிப்பாக காட்டு யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. செடி, கொடிகள் காய்ந்து இருப்பதால் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், மனித தவறுகள் மற்றும் மரங்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதன் காரணமாக அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுவதும், மரங்கள், செடி, கொடிகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாவதும் வழக்கம்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே வனப் பகுதிகளில் தீ பிடித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலந்துறை அடுத்த நாதேகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து காட்டு தீ எரிந்து வருகிறது. இதன் காரணமாக பல ஏக்கர் பரப்பளவிலான காடு எரிந்து நாசமாகியுள்ளது. மரங்கள், மூலிகைகள், செடி, கொடிகள் உள்ளிட்டை தீக்கிரையாகியுள்ளன.
ஹெலிகாப்டர் வரவழைப்பு:
காட்டு தீ குறித்து தகவல் அறிந்து சென்ற மதுக்கரை வனத்துறையினர் தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீலகிரி, ஆனைமலை, சிறுமுகை வனச்சரகங்களில் இருந்து வனப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அனைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 150 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 10 குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் உடன் இணைந்து தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து 5 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வரும் நிலையில், காட்டுத்தீயை அணைக்க சூலூர் விமான படைத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ எரியும் இடங்களில் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. காட்டுத்தீயை அணைக்கும் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆலாந்துறை கிராமத்திற்கு உட்பட்ட ரங்கசாமி கோயில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் வனத்துறையால் தீயை அணைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, வனத்துறையினரிடம் கேட்டறிந்த ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, தீயை விரைந்து அணைக்க அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்