கோவை மணியகாரம்பாளையம் நட்சத்திரா கார்டன் பகுதியில் வசிப்பவர் சரண்யா. தஞ்சாவூரைப் பூர்விகமாக கொண்ட இவர், தனது கணவர் கோபிநாத் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் தம்பி குமார், அவரது தாயார் காளியம்மாளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக கோவை மாநகர மேயர் கல்பனாவும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தங்காமல், தனது தம்பி குமாரின் இல்லத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மேயர் கல்பனா தங்கியிருக்கும் அந்தக் காம்பவுண்டில் நான்கு வீடுகள் இருக்கும் நிலையில், இரண்டு வீடுகளில் அவர்களது உறவினர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேயர் கல்பனா இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், அந்த காம்பவுண்டில் இருந்து சரண்யாவை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது சரண்யா குற்றம் சாட்டியிருந்தார்.
சரண்யா வீட்டை காலி செய்ய வைப்பதற்காக அழுகிய பொருட்களை வீசுவதாகவும், சமையலறை அருகில் சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும் புகார் எழுந்த நிலையில், அது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேயர் கல்பனா குடும்பத்தினர் தொல்லை கொடுத்து வரும் விவகாரம் தொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் துடியலூர் காவல் நிலையத்தில் சரண்யா புகார் அளித்தார். அதில் மேயர் கல்பனா குடும்பத்தினரால் தங்களது குடும்பத்துக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் சரண்யாவின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் இன்று பிற்பகல் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது. காரின் ஒரு பகுதி தீயில் சேதம் அடைந்தததை பார்த்து சரண்யா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல்துறையினரிடம் சரண்யா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோவை மாநகர காவல் துறையினரும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து சரண்யாவிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் கார் பிடித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் மீது கவர் போடப்பட்டிருந்த நிலையில், கவரில் பற்றிய தீ காரின் ஒரு பகுதியை சேதமாக்கி இருப்பதும் தெரியவந்தது. இது திட்டமிடப்பட்டு வைக்கப்பட்ட செயலா அல்லது ஏதேட்சையாக நடந்ததா என்பது குறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேயர் மீது புகாரளித்த பெண்ணின் கார் மர்மமான முறையில் எரிந்து சேதமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.