கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். 23 வயது. இவரது நண்பர் நிதிஷ்குமார் (21). ரஞ்சித் மீது பெண் வன்கொடுமை வழக்கு ஒன்று, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று ரஞ்சித் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் ரஞ்சித், தனது நண்பர்கள் நிதிஷ் மற்றும் கார்த்திக் காந்திபுரம் ராம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சுற்றி கொண்டு இருந்தார். அப்போது கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் கிருஷ்ணன் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் இரண்டு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து ரஞ்சித் மற்றும் நிதிஷ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரஞ்சித் மற்றும் நிதிஷ் குமாரை ஓட ஓட விரட்டி அரிவாளால் அக்கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ரஞ்சித் பலத்த காயமடைந்தார். நிதீஷ்குமார் லேசான காயமடைந்த நிலையில், இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு நபரான கார்த்திக் தப்பி ஓடியதால் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக தாக்குதல் நடந்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ரஞ்சித் மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவர் மீது 6 பேர் கும்பல் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பட்டப்பகலில் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித் மீது ஏற்கனவே ரத்தினபுரி காவல் நிலையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வழக்கு உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்