கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய மலையடிவார பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக இருந்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். அவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள், கோவை மருதமலை அருகே வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கில் உணவு தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த மருதமலை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில் சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கை அமைத்துள்ளது. இந்த ஊராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வனத்தில் இருந்து வெளியேறும் மான், யானை உள்ளிட்ட வன விலங்குகள் குப்பைக் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு அந்தப் பகுதியில் யானைகளின் சாணத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குப்பைக் கிடங்கை அகற்றுமாறு வனத்துறையினர் சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர். எனினும், வனத்துறையின் கோரிக்கையை ஏற்காத ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அங்கேயே குப்பைகளை கொட்டி வருகிறது.மேலும் அதிக அளவு குப்பைகள் சேரும்போது அதற்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மான் மற்றும் யானைகள் குப்பை கிடங்கில் உணவு தேடும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது. குப்பைக் கழிவுகளில் உள்ள உணவுப் பொருட்களை மான் மற்றும் யானைகள் உண்பதால் அவற்றிற்கு உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மருதமலை வனப்பகுதி யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு அளிக்கிறது. இந்த பகுதிகளில் மான், சிறுத்தை, காட்டுமாடு, யானைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி வருகிறோம். இங்கு வரும் யானைகளின் சாணங்களில் அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன. குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என வனத்துறை ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியும், அவர்கள் அகற்றாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். தற்போது மான் மற்றும் யானைகள் குப்பைக் கிடங்கில் உணவு சாப்பிடும் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைக் கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்