கோவை மாநகராட்சி ஆணையாளராக இயற்கை பேரிடர் காலங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இளம் அதிகாரியான ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த குமாரவேல் பாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா, கோவை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் ஐஏஎஸ் அதிகாரியான ராஜகோபால் சுங்கராவிற்கு வயது 30. இவர் கோவை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்ட இளம் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் சுங்கரா. 1990 ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி பிறந்தவர். ஐஐடி காரக்பூரில் பி.டெக் மற்றும் எம்.டெக் படிப்புகளை வேளாண், உணவு பொறியியல் பிரிவில் படித்து முடித்தவர். பின்னர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் எம்.ஏ. பொது நிர்வாகம் படித்துள்ளார். 2014-15-ஆம் ஆண்டில் நடந்த ஐஏஎஸ் தேர்வில் 49 வது இடம் பிடித்து அசத்தினார். பின்னர் 2015 ம் ஆண்டு செப்டம்பரில் ஐஏஎஸ் பணியில் பயிற்சி அதிகாரியாக தமிழ்நாட்டில் பணியை துவக்கினார். 2016 ஜீன் மாதம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியராக பணி செய்தார். முசிறியில் 2 மாதங்கள் பயிற்சி அதிகாரியாக இருந்தார். 2017 ஜீலையில் கால்நடைத் துறையில் உதவிச் செயலராக நியமிக்கப்பட்டார்.
2017 ம் ஆண்டு அக்டோபரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியராக பணியாற்றினார். அப்போது ஏற்பட்ட ஒக்கி புயல் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 2018 ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பெருஞ்சாணி அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளத்தில் சூழப்பட்ட பளுகல், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சிக்கிய பொதுமக்களை சார் ஆட்சியராக இருந்த ராஜாகோபால் சுங்கரா, கொட்டும் மழையில் இடுப்பளவு தண்ணீரில் சென்று பாதுகாப்பாக வெளியேற உதவினார். அவரின் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்றது. 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் தஞ்சாவூரில் கஜா புயல் நிவாரணப் பணியில் கூடுதல் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் கடலூரில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாகவும், 2021 பிப்ரவரியில் தொழில் துறை துணைச் செயலாளராகவும் பணியாற்றினார். கடந்த மே மாதம் சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பேரிடர் மீட்புப் பணிகளில் அனுபவம் கொண்ட ராஜகோபால் சுங்கரா, கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருகின்ற 14-ஆம் தேதி கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா பதவியேற்க உள்ளார். மாநகராட்சி பகுதிகளில் அதிகமாக உள்ள கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது, அவருக்கு முன்னிருக்கும் ஹிமாலய சவாலாக இருக்கும்.