கோவை பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் திருநாவுக்கரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருநாவுக்கரசு மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு இரவு நேரத்தில் டெலிகிராம் செயலியில் ஆபாசமாக பேசிய உரையாடல்கள் குறித்த ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியான நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையத்தில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கு இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. லெப்டினல் அமிர்தேஷ் ஹர்முக் என்ற விமானப் படை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 28 வயதான பெண் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர். இன்றைய விசாரணை முடிவில் காவல் நீட்டிக்கப்படுமா அல்லது விமானப்படை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது தெரியவரும்.


பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை வருகின்ற அக்டோபர் 6 ம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.


கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது.


கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் 5 வயது குழந்தை கடத்தப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் – சங்கீதா தம்பதியினரின் குழந்தை கடத்தப்பட்டது குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


10 ஆண்டுகளுக்குப் பிறகு 'கலைஞரின் வருமுன் காப்போம்' என்ற திட்டத்தினை நேற்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு 1250 முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று இரவு சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தர்மபுரி மாவட்டம் செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்குப் பதிவேடுகள், மக்கள் புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.


நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மேலும் 2 பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இதேபோல லவ்டேல் பகுதியில் உள லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கும், மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த 10 காட்டு யானைகள் கொண்ட கூட்டத்தை வனத்துறையினர் 3 மணி நேரம் போராடி விரட்டினர்.


கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் அசல் நில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்காக 624 ஏக்கர் நிலம் கையக்கப்படுத்த 1132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.