கோவை சுந்தராபிரம் பகுதியில் ஒரு வீட்டில் பிடிக்கப்பட்ட வெள்ளை நிற நாகபாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர், தண்ணீர் தொட்டியில் வழக்கம் போல் தண்ணீர் நிரப்ப சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு வெள்ளை நிற நாகபாம்பு பதுங்கி இருந்துள்ளது. வெள்ளை நிற நாகபாம்பு இருப்பதை பார்த்து அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். ந்த பாம்பை அடித்து கொல்ல மனம் இல்லாத அவர், வீட்டில் வெள்ளை நிற நாகப்பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதனை பிடித்து செல்லுமாறும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் அவ்வமைப்பை சேர்ந்த மோகன் என்பவர் விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பார்சியல் ஆல்பினோ கோப்ரா என்ற வகையைச் சார்ந்த இரண்டடி நீளம் கொண்ட வெள்ளை நிற நாகபாம்பு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த வெள்ளை நிற நாகப்பாம்பை காயமின்றி பத்திரமாக பிடித்தார். பின்னர் அந்த வெள்ளை நிற நாக பாம்பை கோவை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் அந்த வெள்ளை நிற நாகத்தை வனப்பகுதியில் பத்திரமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், வெள்ளை நிற நாக பாம்புகள் தனி வகையை சார்ந்தது இல்லை எனவும், மரபணு மற்றும் நிறமிகளில் இருக்கும் பிரச்சனைகள் காரணமாக பாம்புகள் வெள்ளைநிறத்தில் இருக்கும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். மழைக்காலம் என்பதால் பாம்புகள் அதிகளவில் உலாவலாம் எனவும், பாம்புகள் அச்சத்தில் தான் மனிதர்களை தாக்குவதாகவும், இதுபோல பாம்புகள் வீடுகளுக்கு வந்தால் அவற்றை அடித்துக் கொள்ளாமல் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடிப்பவர்களிடம் கூறினால், அவற்றை மீட்டு பத்திரமாக வனப்பகுதிக்குள் விடுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போல போத்தனூர் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டது. சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் அதே பகுதிக்கு அருகே மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2019 ம் ஆண்டு கோவை மதுக்கரை பகுதியிலும், கடந்த 2022 ம் ஆண்டு சுந்தராபுரம் பகுதியிலும் இதே போன்ற வெள்ளை நிற பாம்பு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவையில் தொடர்ச்சியாக வெள்ளை நிற நாகப்பாம்புகள் அடிக்கடி பிடிக்கப்படுவது பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : திருச்செந்தூரில் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் காவல் நிலையத்தில் உயிரிழப்பு