பிரதமர் மோடி தலைமையிலான 3.0 அரசின் முதல் பட்ஜெட் வரும் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையை இழந்து, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தபிறகு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பின்மை, தனிநபர் வருவாய் சரிவு ஆகிய காரணங்களால் நடுத்தர மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, பாஜக பெரும்பான்மையை இழந்ததாக கூறப்படுகிறது. இதன்  காரணமாக நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என கருதப்படுகிறது. நாட்டின் சம்பளம் பெறும் வகுப்பினர் இந்த பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். ஊதியம் பெறும் வகுப்பினருக்கு அரசு வரிவிலக்கு அளித்தால், அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.


தொழில் துறையினர் எதிர்பார்ப்புகள்


மத்திய பட்ஜெட்டில் கோவையை சார்ந்த தொழில் அமைப்பினரும் பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்துள்ளனர். இது தொடர்பாக சிறு குறு தொழில் துறையினர் கூறுகையில், ”சிறு குறு தொழில்களுகான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தற்போது உள்ளதை 5 லட்சம் கோடியாக மாற்ற வேண்டும். அப்போது தான் விவசாயத்திற்கு நிகரான தொழிலாக இருக்கும். ஜி.எஸ்.டியில் மாற்றம் தேவை. ஜிஎஸ்டியில் எதற்கு எடுத்தாலும் பெனால்ட்டி வருகிறது. அதனை தவிர்க்கும் வகையில் அந்தந்த வருடத்திலே கணக்கை முடித்துவிட வேண்டுமென்றார். சிறு குறு தொழில்களுக்கு அளித்து வந்த மானியங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் தர வேண்டும். கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோவை வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை எதிர்பார்த்து உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.


கழிவு கஞ்சாலை தொழில்சங்கத்தின் கூறுகையில், “நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான வரிகளை நாம் செலுத்துகிறோம். இறக்குமதி பொருட்களின் விலைகள் முன்பு போல் இல்லை. பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் சர்வதேச நாடுகளுடன் போட்டி போட முடிவதில்லை. பருத்திகளுக்கு அதிகமான இறக்குமதி வரி இருக்கிறது. அரசாங்கம் அனைவருக்கும் ஏற்றாற்போல் ஒரே சட்டத்தை கொண்டு வர வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கையை கைவிட வேண்டும். சிறு குறு தொழில் நிறுவனத்தார்களிடம் கேட்டு சட்ட திட்டத்தை கொண்டு வர வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ள Fiber Policyயை ரத்து செய்ய வேண்டும். ஜாப் வொர்க் செய்வோர்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். கழிவு பஞ்சுகளை மறுசுழற்சி செய்வதற்கு சிறப்பு சலுகை தர வேண்டும். கோவையில் உள்ள மைக்ரோ நிறுவனங்களிடம் கேட்டு திட்டங்களை  கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.