திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கருப்பு கொடி மற்றும் திமுக அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியபடி 200 க்கும் மேற்படட அதிமுகவினர் கலந்து கொண்டனர். சாலையின் இரு புறமும் நின்றபடி, திமுக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 




ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி எடுக்காமல், நாடகமாடிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக  நிறைவேற்ற வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டத்தை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். அதனையும் செய்யவில்லை. 39 எம்.பி.க்களை வைத்துள்ள திமுக மேகதாது பிரச்சனையிலும் எதுவும் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தால் போதும் என வந்து விட்டு, மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக திமுக அரசு இருக்கிறது.




கொரோனா தொற்று வந்த போது எடப்பாடி அவர்கள் மற்ற மாநிலங்கள் வியக்கத்தக்க வகையில் நடவடிக்கை எடுத்து, பாரத பிரதமரிடம் பாராட்டுப் பெற்றார். உயிரிழப்புகளை குறைத்து இருந்தோம். ஆனால் திமுக அரசு வந்த பின்னால் ஒவ்வொரு ஊரிலும் 50, 60 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அதனை மறைக்க முடியுமா? இன்றைக்கு மக்களைக் காப்பாற்றாத அரசாக திமுக உள்ளது. மூன்றாவது அலை வரும் போது மக்களை காப்பாற்ற இந்த அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிகமான தடுப்பூசியை பெற்றுத் தர வேண்டும். டெல்லி சென்ற போது பிரதமரிடம் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னிர்செல்வம் அதிகமாக தடுப்பூசி தர வேண்டும் என கேட்டார்கள். 


மக்களை காப்பாற்ற வேண்டும். அதை விட்டு விட்டு அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். ஆங்காங்கே காவல் துறையை வைத்து மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இதை எல்லாம் பார்த்து வந்த இயக்கம் இது. ஆகவே காவல் துறையும் நடுநிலையோடு இருக்க வேண்டும். எங்கே பார்த்தாலும் கொடிக் கம்பத்தை எடுக்க சொல்கிறார்கள். நாங்கள் இருந்தபோது, திமுக கொடிக்கம்பம் இருந்ததே? அதேபோல தொண்டர்களை மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்.




கோவை மாவட்ட மக்களுக்கு 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். நீங்கள் எங்கள் மீது என்ன வழக்கு வேண்டுமானாலும் போடலாம். பொய்யான குற்றச்சாட்டு சொல்லலாம். ஆனால் நாங்கள் செய்த திட்டங்களை மறைக்க முடியாது. பல திட்டங்களை முடித்துள்ளோம். பல திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த திட்டங்களை இந்த அரசு முடிக்க வேண்டும். மாநகராட்சியில் நாங்கள் விட்ட பல டெண்டர்களை ரத்து செய்துள்ளீர்கள். இதனை கண்டிக்கிறோம். அந்தப் பணிகளை செயல்படுத்த வேண்டும். அதிமுக தொண்டர்கள் யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டார்கள். காவல் துறையை வைத்து அடக்குவது என்றைக்கும் நடக்காது. காவல் துறை நடுநிலையோடு இருக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.


இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பல்வேறு திட்டங்களை அறிவித்து ஆட்சியில் அமர்ந்து கொண்டு, எதையும் செய்யவில்லை. அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்குப் போடுகிறார்கள். திமுகவினர் சொல்வதால் காவல் துறை நடுநிலைமை இல்லாமல் பொய் வழக்குப் போடுகிறார்கள். அவற்றை  கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த பின்னர், திமுகவால் அவற்றை செயல்படுத்த முடியவில்லை. அதனை திசை திருப்ப வருமான வரி சோதனை செய்கிறார்கள். எதற்கும் அஞ்ச மாட்டோம். மக்களுக்காக திட்டங்களை பெற்று தர அதிமுக தர தயாராக இருக்கும். அதற்காக மத்தியிலும் தேவையான அழுத்தங்களை கொடுக்கும்'' என அவர் தெரிவித்தார்.