கோவை மாவட்டம் சிறுமுகை அருகே விவசாய நிலத்தில் உயிரிழந்த கழுகுக்கு பாடை கட்டி கிராம மக்கள் இறுதி சடங்கு செய்தனர்.


கோவை மாவட்டம் சிறுமுகை அருகே திம்மராயம்பாளையம் கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பவானி ஆற்று படுகையில் உள்ள இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இந்த பகுதி மக்கள் அதிகளவில் பெருமாளை வழிபடுவது வழக்கம். கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளதால் அதனை சுற்றியுள்ள மக்கள் வைணவத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்நிலையில் திம்மராயம்பாளையம் கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை மாரம்மாள் என்பவரது தோட்டத்தில் ஒரு கழுகு இறந்து கிடந்துள்ளது.


இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அக்கிராம மக்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கழுது உயிரிழந்ததால், சுற்றுவட்டார கிராமங்களுக்கு நல்லது இல்லை என கருதினர். இதனால் உயிரிழந்த கழுகிற்கு மனிதர்களை போல இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் முடிவு செய்தனர். இதன்படி கிராம மக்கள் இணைந்து பூஜை செய்து பாடை கட்டி அதில் கழுகின் உடலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது பின்னால் வந்த கிராம மக்கள் கோவிந்தா, கோவிந்தா என கோசம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே கழுகின் உடல் மீது நெய் ஊற்றி எரியூட்டினர். தொடர்ந்து எரிந்த சாம்பலை எடுத்துச் சென்று அருகே உள்ள பவானி ஆற்றில் கரைத்தனர்.


இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ”இந்த பகுதி மக்கள் அதிகளவில் பெருமாளை வழிபடுகிறார்கள்‌. கழுகினை கருடனாக நினைத்து வழிபாடு செய்வது வழக்கம். கருடன் இறந்ததால் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பொழியாது எனவும், விவசாயம் பாதிக்கப்படும் எனவும் ஊர் பெரியவர்கள் கூறினர். பெரியவர்களின் அறிவுரைப்படி கருடனை முறைப்படி அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, மனிதர்கள் உயிரிழந்தால் எவ்வாறு நல்லடக்கம் செய்யப்படுமோ அதுபோல் தேர் கட்டி அதில் உடலை வைத்து எடுத்துச் சென்றோம். அப்போது காரமடையில் இருந்து வரவழைக்கப்பட்ட தாசர்கள் சங்கு, சேகிண்டி முழங்க ஊர்வலம் சென்றது. இவ்வாறு செய்தால் ஊர் செழிக்கும், தண்ணீர் பஞ்சம் வராது என்பது ஐதீகம். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற சம்பவம் நடைபெற்றதால் முன்னோர் அறிவுரைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தனர்.


மேலும் படிக்க : Director Marimuthu: “மனவேதனை தருகிறது” .. இயக்குநர் மாரிமுத்து மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..