தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார் என அழுத்தம் திருத்தமாக சொன்ன முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மக்களவை தொகுதி முடிவு குறித்து அழுத்தமாக கருத்து தெரிவிப்பதை தவிர்த்தார்.


கோடை வெயில் அதிகரித்து காணப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள என்.எஸ்.ஆர். சாலையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.




இதனைதொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கோடைகாலங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருவது வழக்கம் எனவும், இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் நீர் மோர் பந்தல் மக்கள் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை தீர்க்கக் கூடிய கட்சி அதிமுக என தெரிவித்த அவர், மக்களின் எதிர்பார்ப்பு, மக்களின் நம்பிக்கை  தமிழகத்தின் எதிர்காலம் எடப்பாடியார் தான் என தெரிவித்தார். தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் எனவும், நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் கண்டிப்பாக தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார்.


தமிழக மக்கள் பல பிரச்சனைகளில் இருக்கின்றனர் எனவும், கொரோனா காலங்களில் மக்களுக்காக செயல்பட்டது அதிமுக எனவும் கூறிய அவர், அந்த அடிப்படையில் மீண்டும் எடப்பாடியாரின் ஆட்சி கண்டிப்பாக அமையும் எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம், புலியகுளம் பகுதிகளிலும் நீர் மோர் பந்தல் அதிமுக சார்பில் திறக்கப்பட்டது. தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார் என அழுத்தம் திருத்தமாக சொன்ன முன்னாள் அமைச்சர் வேலுமணி, கோவை மக்களவை தொகுதி முடிவு குறித்து அழுத்தமாக கருத்து  தெரிவிப்பதை தவிர்த்து சென்றது குறிப்பிடத்தக்கது