மத்திய இரயில்வே துறையை கண்டித்து கோவை இரயில் நிலையம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மே17 இயக்கம், தமிழ்நாடு வணிகர் பேரவை, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி உட்ப பல்வேறு அமைப்புகளை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயில்வே துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது மத்திய ரயில்வே துறை தமிழகத்தை புறக்கணித்து வருவதாகவும், குறிப்பாக தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் மாவட்டங்களை புறக்கணிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். காசி தமிழ் சங்கமத்திற்கு இலவச ரயில் சேவை வழங்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம், திருச்செந்தூர், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு கோவை வழியாக இரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும் கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு மீண்டும் ரயில்களை இயக்க வேண்டுமென வலியுறுத்தினர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், ”ஒன்றிய அரசு காசில்லாமல் பயணிக்க, காசிக்கு ரயில் விடுகிறது. ஆனால், இங்குள்ள மக்கள் காசு கொடுத்து பயணிக்க தயாராக இருக்கக் கூடிய ராமேஸ்வரம், மதுரை, பழனி, திருச்செந்தூர், தென்காசி உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் விட ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழ் நாட்டிலேயே தொழில் நகரமான கோவையில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் இங்கு அதிகம் வசித்து இங்குள்ள தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர்.




இங்கு தங்கியுள்ள வெளி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. தற்போது, பொள்ளாச்சி ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையிலும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு ரயில் போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த ரயில்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ரயில் பயணம் தொடங்கப்பட்டால், கோவையில் தங்கியுள்ள வெளி மாவட்ட மக்களில் பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், தொழில் நகரமான கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வர்த்தகமும் பெருகும். ரயில்வே துறைக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். 


ரயில்வே துறை மோடி ஆட்சியில் தமிழகத்தை முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை புறக்கணித்து வருகிறது.  பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை பாலக்காடு இரயில்வே கோட்டத்தில் இருந்து பிரித்து, சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் முதல் பொள்ளாச்சிக்கு மெட்ரோ ரயில் இயக்க வேண்டும். அனைத்து ரயில்களையும் சிங்காநல்லூர் இருகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண